ADDED : மார் 28, 2024 03:33 AM
பெங்களூரு : தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஆவணங்களின்றி கொண்டு சென்ற 25 லட்சம் ரூபாய் ரொக்கம், 199 எல்.இ.டி., 'டிவி'க்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, முக்கிய பகுதிகள், மாநில, மாவட்ட எல்லைப் பகுதிகள் என, மாநிலம் முழுதும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.
முறைகேடுகளைத் தடுக்கும் பணியில் பறக்கும் படையினரும் ஈடுபட்டுள்ளனர். அதிரடியாக சோதனை நடத்தி உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லும் பரிசு பொருட்கள், ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்கின்றனர்.
அந்த வகையில், பெங்களூரு தர்மராயசாமி கோவில் அருகில் நேற்று முன்தினம் இரவு தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு கார் சோதனை செய்யப்பட்டது. காரில் கட்டுக் கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தன. அவற்றை மதிப்பிட்டபோது, மொத்தம் 25 லட்சம் ரூபாய் இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால், அந்த ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. ஹலசூரு கேட் போலீசார் விசாரிக்கின்றனர்.
இதேபோன்று, நெலமங்களாவின் லாங்கோ சோதனை சாவடியில் தேர்தல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு சரக்கு வாகனத்தில் நடத்திய சோதனையில், ஆவணங்களின்றி 199 எல்.இ.டி., 'டிவி'க்கள் இருந்தன. அவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.