கடல் எல்லை பாதுகாப்புக்கு 2 நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல்கள்
கடல் எல்லை பாதுகாப்புக்கு 2 நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல்கள்
ADDED : செப் 11, 2024 01:38 AM

கொச்சி,:கொச்சின் ஷிப்யார்டு நிறுவனத்தின், 'ஐ.என்.எஸ்., முளிக், ஐ.என்.எஸ்., மாள்பி' ஆகிய, இரு நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல்கள், கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, கொச்சின் ஷிப்யார்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மொத்தமாக, எட்டு நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல்களை கட்டமைக்க, ராணுவ அமைச்சகத்துடன், 2019 ஏப்ரலில் எங்கள் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது.
இந்த மஹி கிளாஸ் கப்பல்கள், தற்போது கடற்படையில் இருக்கும் அபே கிளாஸ் நீர்மூழ்கி கப்பல்களுக்கு மாற்றாக, கடற்படையில் இணைக்கப்பட உள்ளன.
இந்திய கடல் எல்லைகளை பாதுகாக்கும் பணிகளையும், கடலில் கண்ணிவெடிகளை கண்டறிவது உள்ளிட்ட தீவிர கண்காணிப்பையும், இந்த கப்பல்கள் மேற்கொள்ளும்.
இந்த கப்பல், 900 டன் எடை உடையது. அதிகபட்ச வேகம், 25 கடல் மைல்கள். கடலோர கண்காணிப்பிற்காக, உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள சோனார் அமைப்பு, இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.