கர்நாடகாவில் கர்ப்பிணி பசு கொலை 46 நாட்களுக்கு பின் 2 பேர் கைது
கர்நாடகாவில் கர்ப்பிணி பசு கொலை 46 நாட்களுக்கு பின் 2 பேர் கைது
ADDED : மார் 13, 2025 02:16 AM

உத்தர கன்னடா,இறைச்சிக்காக, கர்ப்பிணி பசுவை கொன்று, வயிற்றில் இருந்த கன்றை வீசியவர்களில் இருவரை, 46 நாட்களுக்கு பின், போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம், உத்தர கன்னடா மாவட்டம் கார்வாரின் ஹொன்னாவரின் கொண்டகுளி கிராமத்தில், கர்ப்பிணி பசுவை கொன்று, வயிற்றில் இருந்த கன்றை வெளியே வீசிவிட்டு, இறைச்சி திருடிச் செல்லப்பட்டது. இச்சம்பவம் மாநிலம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குற்றவாளிகளை கைது செய்ய, போராட்டங்கள் நடத்தப்பட்டன. இறுதியில், பட்கலின் முஜாமின், வாசிம் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக, மாவட்ட எஸ்.பி., நாராயணா நேற்று அளித்த பேட்டி:
பசுவை கொன்றது தொடர்பாக, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அல்தாப் கடபுருசு, மதின் கடபுருசு, முகமது ஹசேன் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், வாசிம், முஜாமின் குறித்து தகவல் தெரிவித்தனர். அதற்குள் அவர்கள் இருவரும் தார்வாடுக்கு சென்று, அங்கிருந்து மும்பைக்கு தப்பிச் சென்றனர்.
மஹாராஷ்டிரா சென்ற போலீசார், வாசிமை கைது செய்தனர். பணம் இல்லாததால், மீண்டும் தன்னுார் வந்த முஜாமின் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர்கள், பட்கலில் நடந்த திருமண விழாவுக்காக, கொண்டுகுளி கிராமத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்த கர்ப்பிணி பசுவை கொன்றுள்ளனர்.
இதற்கான தொகையை, திருமண வீட்டாரிடம் இருந்து 'கூகுள் பே' மூலம் பெற்றனர். இது, போலீசாருக்கு குற்றவாளிகளை பிடிக்க சுலபமாக இருந்தது.
கடந்த 46 நாட்கள் ஐந்து மாநிலங்களில் 11,000 கி.மீ., பயணம் செய்து, குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர். 130 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. 400 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது; 800க்கும் மேற்பட்ட மொபைல் போன் எண்கள் சரிபார்க்கப்பட்டன.
இவர்கள் பற்றிய ரகசிய தகவல் தெரிவித்த இருவருக்கு, தலா 50,000 ரூபாய் வீதம் 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.