நெட்டார் கொலையில் 2 பேர் கைது; அடைக்கலம் கொடுத்தவரும் சிக்கினார்
நெட்டார் கொலையில் 2 பேர் கைது; அடைக்கலம் கொடுத்தவரும் சிக்கினார்
ADDED : மே 10, 2024 10:55 PM

மங்களூரு : தட்சிண கன்னடா பா.ஜ., இளைஞர் அணித் தலைவர் பிரவீன் நெட்டார் கொலையில், இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவரும் கைதாகி உள்ளார்.
தட்சிண கன்னடா மாவட்ட பா.ஜ., இளைஞர் அணி தலைவர் பிரவீன் நெட்டார், 27. இவரது வீடு சுள்ளியா பெல்லாரேயில் உள்ளது. இறைச்சிக் கடை நடத்தி வந்தார்.
2022 ஆண்டு ஜூலை 26ம் தேதி இரவு 10:30 மணிக்கு, இறைச்சிக் கடையில் இருந்து சிறிது தொலைவில் பிரவீன் நெட்டார், மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம், கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது ஆட்சியில் இருந்த பா.ஜ., அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கொதித்து எழுந்தனர்.
பிரவீன் நெட்டார் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற, எம்.பி., நளின்குமார் கட்டீல் காரை, ஹிந்து அமைப்பினர் கவிழ்ந்தனர். இந்த வழக்கு என்.ஐ.ஏ., விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது.
ரூ.5 லட்சம் சன்மானம்
இந்த வழக்கின் முக்கிய நபரான சுள்ளியா சாந்திநகரின் முஸ்தபா பைச்சார், 43, தலைமறைவாகி விட்டார். கொலை தொடர்பாக முஸ்தபா பைச்சார் உட்பட 20 பேர் மீது, என்.ஐ.ஏ., நீதிமன்றத்தில், கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
முஸ்தபா பைச்சார் தேடப்படும் நபர் என்று என்.ஐ.ஏ., அறிவித்தது. அவரை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு, 5 லட்சம் ரூபாய் சன்மானம் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
அடைக்கலம்
இந்நிலையில், ஹாசன் மாவட்டம், சக்லேஸ்பூர் அனேமஹால் கிராமத்தில், ஒரு வீட்டில் முஸ்தபா பைச்சார் வசிப்பதாக, என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு அங்கு சென்ற, என்.ஐ.ஏ., அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
நெட்டார் கொலையில் தொடர்புடைய இலிஹாஸ் என்பவரும், முஸ்தபா பைச்சாருடன் தங்கி இருந்து தெரிந்தது. அவரும் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவருக்கும் அடைக்கலம் கொடுத்த, சிராஜ் என்பவரையும் என்.ஐ.ஏ., கைது செய்தது. மூன்று பேரையும் பெங்களூரு அழைத்துச் சென்று விசாரிக்கின்றனர்.