ADDED : மே 02, 2024 01:22 AM
ஹைதராபாத் :தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு உள்ள 17 லோக்சபா தொகுதிகளுக்கு வரும் 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ் பிரசாரத்தின் போது காங்கிரஸ் குறித்தும், அதன் தலைவர்கள் குறித்தும் தரக்குறைவாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தேர்தல் கமிஷனில் காங்., புகார் அளித்தது. சந்திரசேகர ராவுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது.
அவர் அளித்த பதிலில், 'தெலுங்கு தெரியாத தேர்தல் அதிகாரிகள், வட்டார மொழியில் பேசியதை தவறாக மொழி பெயர்த்துள்ளனர்' என, விளக்கம் அளித்திருந்தார். சந்திரசேகர ராவின் விளக்கத்தை ஆய்வு செய்த தேர்தல் கமிஷன், அவர் தேர்தல் நடத்தை விதிகளை மீறியிருப்பதை உறுதி செய்தது.
இதையடுத்து, சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் தேர்தல் தொடர்பான பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள், பேரணிகள், நிகழ்ச்சிகளில் பேசவும், ஊடகங்களில் பேட்டியளிக்கவும் தேர்தல் கமிஷன் தடை விதித்தது.

