மாநகரின் முக்கிய இடங்களில் 2 நாள் பாதுகாப்பு ஒத்திகை
மாநகரின் முக்கிய இடங்களில் 2 நாள் பாதுகாப்பு ஒத்திகை
ADDED : மே 04, 2024 09:00 PM
புதுடில்லி:தேசிய பாதுகாப்புப் படை மற்றும் டில்லி மாநகரப் போலீஸ் இணைந்து டில்லி சர்வதேச விமான நிலையம், ராஜிவ் சவுக் மெட்ரோ நிலையம் மற்றும் ராமகிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களில் இரண்டு நாட்கள் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர்.
தலைநகர் டில்லி மற்றும் நொய்டாவில் உள்ள 200 பள்ளிகளுக்கு சமீபத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
சோதனைக்குப் பின் அது புரளி என்பது தெரிந்தது. இந்நிலையில், தேசிய பாதுகாப்புப் படை மற்றும் டில்லி மாநகரப் போலீஸ் இணைந்து நேற்று முன் தினம் இரவு 10:00 மணிக்கு புதுடில்லி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர்.
கமாண்டோக்கள்,மாநகரப் போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் பங்கேற்றனர்.
அதேபோல தீயணைப்புத் துறை மற்றும் டில்லி பேரிடர் ஆணையம் ஆகியவையும் இந்த ஒத்திகையில் பங்கேற்றன.
விமான நிலையத்தைத் தொடந்து, ராஜிவ் சவுக் மெட்ரோ ரயில் நிலையம், ஹைதராபாத் ஹவுஸ், ஆர்.கே.புரம் டில்லி பப்ளிக் பள்ளி ஆகிய இடங்களிலும் நேற்று அதிகாலை வரை ஒத்திகை நடந்தது.
தாஜ் பேலஸ் ஹோட்டல், துவாரகாவில் உள்ள யஷோ பூமி, காஷ்மீர் கேட் மெட்ரோ நிலையம் மற்றும் மத்திய டில்லியில் உள்ள பார்லிமென்ட் புதிய கட்டடம் ஆகியவற்றிலும் ஒத்திகை நடத்தப்பட்டன.