தொழிலதிபர் வீட்டில் 2 கிலோ தங்கம் 50 கிலோ வெள்ளி திருட்டு
தொழிலதிபர் வீட்டில் 2 கிலோ தங்கம் 50 கிலோ வெள்ளி திருட்டு
ADDED : பிப் 28, 2025 10:58 PM
ஜெயநகர்: தொழிலதிபரின் வீட்டில், இரண்டு கிலோ தங்க நகைகள், 50 கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற நேபாளத்தைச் சேர்ந்த தம்பதியை போலீசார் தேடி வருகின்றனர்.
பெங்களூரின், ஜெயநகரில் வசிப்பவர் பிரஷாந்த். தொழிலதிபர். இவரது வீட்டில் நேபாளத்தைச் சேர்ந்த ரபீந்திரா ஷாஹி, 34, அவரது மனைவி ஷில்பா ஆகிய இருவரும் பணியாற்றி வந்தனர். தொழிலதிபர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக நடந்து கொண்டனர்.
பிப்ரவரி 22ம் தேதி, தன் குடும்பத்துடன், பிரயாக்ராஜில் நடந்த மஹா கும்பமேளாவுக்கு பிரஷாந்த் சென்றிருந்தார். வீட்டை பார்த்துக் கொள்ளும்படி, நேபாள தம்பதியிடம் கூறியிருந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, தொழிலதிபர் குடும்பத்தினர் வீடு திரும்பினர். வீட்டில் நேபாள தம்பலி இல்லை. வீட்டில் இருந்த இரண்டு கிலோ தங்க நகைகள், 50 கிலோ வெள்ளி பொருட்களும் மாயமாகி இருந்தன.
இதுகுறித்து, ஜெயநகர் போலீஸ் நிலையத்தில், தொழிலதிபர் புகார் அளித்தார். போலீசாரும் வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர்.
தொழிலதிபரின் வீட்டில் இருந்து, மெஜஸ்டிக் பஸ் நிலையம் வரையிலான சாலைகளில் உள்ள, கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். இரண்டு நாட்களில் 450க்கும் மேற்பட்ட கேமராக்களை ஆய்வு செய்தனர்.
மெஜஸ்டிக் பஸ் நிலையத்துக்கு நேபாள தம்பதி வந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து எங்கு சென்றனர் என்பது தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
இரண்டு நாட்களாகியும், தம்பதியை பற்றி எந்த தடயமும் கிடைக்கவில்லை.
பெரும்பாலான வீடுகளில் நடக்கும் கொள்ளை சம்பவங்களில், பணியாட்களே காரணமாக இருக்கின்றனர். 'பணியாட்களை நியமிக்கும்போது, அவர்களின் ஆவணங்களை பெற வேண்டும்.
'அவர்களின் பின்னணியை தெரிந்து கொள்ள வேண்டும்' என, போலீஸ் துறை பல முறை எச்சரித்துள்ளது.
ஆனாலும் வீடுகளின் உரிமையாளர்கள் இதை அலட்சியப்படுத்துவதால், இத்தகைய குற்றங்களை போலீசாரால் தடுக்க முடியவில்லை.