ADDED : ஆக 18, 2024 11:37 PM

சாம்ராஜ்நகர் : ஹனுாரில் இருந்து தமிழகத்திற்கு, காரில் யானை தந்தம் கடத்தி சென்ற, தமிழகத்தின் இருவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாம்ராஜ்நகரின் ஹனுாரில் இருந்து தமிழக பதிவெண் கொண்ட காரில், யானை தந்தங்கள் கடத்தப்படுவதாக, ஹனுார் வன பாதுகாப்பு பிரிவு எஸ்.ஐ., விஜயராஜுக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி, ஹனுார் அருகே பி.ஜி.பாளையா கிராமத்தில், வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக வந்த தமிழக பதிவெண் கொண்ட காரை நிறுத்தினர். காருக்குள் சோதனை நடத்திய போது, இரண்டு யானை தந்தங்கள் கண்டெடுக்கப்பட்டது. காருக்குள் இருந்த மூன்று பேரிடம் விசாரணை நடந்தது.
சாம்ராஜ்நகர் தாலுகா, அங்கனசெட்டிபுரா கிராமத்தின் சிவமூர்த்தி, 57, தமிழகத்தின் திருப்பூர் மாவட்டம், ராவணபுரம் கிராமத்தின் சிவகுமார், 44, ஆண்டிபாளையம் கிராமத்தின் சின்னகவுண்டன் ஆண்டனி, 46 என்பதும், தமிழகத்திற்கு யானை தந்தங்களை கடத்தியதும் தெரிந்தது.
மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். யானை தந்தங்களும், காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

