ADDED : ஏப் 27, 2024 01:03 AM
ஸ்ரீநகர், ஜம்மு - காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூர் பகுதியை சேர்ந்த செக் மொஹல்லா நவ்போராவில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர்.
இந்நிலையில் இரவானதால் துப்பாக்கி சண்டை நிறுத்தப்பட்டது. நேற்று காலை மீண்டும் துவங்கிய இந்த துப்பாக்கி சண்டையில், பாதுகாப்பு படையினர் சுட்டதில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த மோதலில் இரண்டு ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் காயமடைந்த இரு ராணுவ வீரர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த பயங்கரவாதிகள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை தொடர்வதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.

