புனேவைப் போல இந்தூரில் சம்பவம்... அதிவேகமாக வந்த கார் மோதி 2 இளம்பெண்கள் உயிரிழப்பு
புனேவைப் போல இந்தூரில் சம்பவம்... அதிவேகமாக வந்த கார் மோதி 2 இளம்பெண்கள் உயிரிழப்பு
ADDED : செப் 16, 2024 09:38 AM

இந்தூர்: மத்திய பிரதேசத்தில் நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு செல்ல தப்பான ரூட்டில் காரை அதிவேகமாக இயக்கிய போது, ஸ்கூட்டரில் மோதிய விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர்.
கடந்த மே மாதம் புனேவின் கல்யாணி நகர் பகுதியில் 17 வயது சிறுவன் ஒருவன், அதிவேகமாக காரை ஓட்டிச் சென்று பைக் மீது மோதியதில் அனீஷ் துதியா மற்றும் அஷ்வினி கோஸ்டா ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் போது, சிறுவன் குடிபோதையில் இருந்ததாகவும் சொல்லப்பட்டது. விபத்தை ஏற்படுத்திய சிறுவனுக்கு உடனே ஜாமின் வழங்கப்பட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இதே போன்று மத்திய பிரதேசம் இந்தூரில் இருபெண்கள் சென்ற ஸ்கூட்டர் மீது தவறான திசையில் அதிவேகமாக வந்த கார் மோதியுள்ளது. இதில், ஸ்கூட்டரில் சென்ற திக்ஷா ஜடோன்,25, லட்சுமி தோமர், 24, ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து நடந்த சி.சி.டி.வி., காட்சிகள் வெளியாகிய நிலையில், தப்பியோடிய சொகுசு கார் ஓட்டுநர் கஜேந்திர பிரதாப்பை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக, கேக்கை வாங்கிக் கொண்டு, அவசர அவசரமாக தவறான பாதையில் சென்றதால் விபத்து நேர்ந்தது தெரிய வந்துள்ளது.