ADDED : செப் 06, 2024 12:48 AM
மூணாறு, செப். 6--
கேரள மாநிலம் மூணாறு அருகே சின்னக்கானல் பகுதியில், காட்டு யானைகள் சக்கை கொம்பன், முறிவாலன் கொம்பன் ஆக., 21ல் மோதிக் கொண்டன. பலத்த காயமடைந்த முறிவாலன் கொம்பன், சிகிச்சை பலனின்றி ஆக., 31 நள்ளிரவு இறந்தது.
வனத்துறை முதன்மை கால்நடை டாக்டர் அருண் சக்கரியா தலைமையில், இறந்த யானையின் உடலை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்ததில், சக்கை கொம்பன் தந்தங்களால் குத்தியது.
இதனால், முறிவாலன் கொம்பனின் கல்லீரலில் பலத்த காயம் ஏற்பட்டதும், விலா எலும்புகள் முறிந்ததும், இதுவே முறிவாலன் யானை இறப்பதற்கு காரணம் என்றும் முதற்கட்ட தகவலில் தெரியவந்தது.
இந்நிலையில், முறிவாலன் உடலில், 2 முதல் 4மி.மீ., நீளம் கொண்ட, 20 துப்பாக்கி தோட்டாக்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை, யானையின் உடல் உறுப்புகளை பாதிக்கும் அளவில் இல்லை என்றாலும், யானை உடலில் தோட்டாக்கள் பாய்ந்தது குறித்து வனத்துறை யினர் விசாரிக்கின்றனர்.