ADDED : ஆக 09, 2024 12:12 AM
புதுடில்லி: மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள நகைக்கடை ஒன்றில் சமீபத்தில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் ஈடுபட்ட அமலாக்கத்துறை உதவி இயக்குனர் சந்தீப் சிங் யாதவ், நகைக்கடையில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி, நகைக்கடை அதிபர் மகனை கைது செய்யப்போவதாக மிரட்டியுள்ளார்.
அவரை கைது செய்யாமல் இருக்க, தனக்கு 25 லட்சம் ரூபாயை லஞ்சமாக தருமாறு சந்தீப் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக நடந்த சமரச பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, 20 லட்சம் ரூபாயாக குறைக்கப்பட்டது.
எனினும், லஞ்சம் தர விரும்பாத நகைக்கடை அதிபர், இது தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.
இதன்படி, லஞ்சப்பணத்தை நகைக்கடை அதிபர் கொடுத்தபோது, அதை பெற்ற அமலாக்கத்துறை உதவி இயக்குனர் சந்தீபை, சி.பி.ஐ., அதிகாரிகள் கையும், களவுமாக கைது செய்தனர்.