ADDED : பிப் 25, 2025 10:41 PM
மாநில அரசுகளின் வெற்றியை மூன்று கொள்கைகள் தீர்மானிக்கின்றன. இம்மூன்று கொள்கைகளையும் தலா 20 மாதங்களாக பிரித்தால், மாநில அரசு அடுத்த தேர்தலிலும் வெற்றி பெறுமா என்பது தெரிந்துவிடும்.
ஒரு மாநிலத்தை ஆளும் கட்சி, 'ஆட்சியில் செயல் திறன், ஆளும் கட்சியில் ஒற்றுமை, சமூகத்தில் நல்லிணக்கம்' ஆகிய மூன்று கொள்கைகளை கடைப்பிடிக்க வேண்டியது முக்கியம். இம்மூன்றையும் சரியாக பயன்படுத்தினால், அடுத்த தேர்தலிலும் ஆட்சியை பிடிப்பதில் எந்த பாதிப்பும் இருக்காது.
தற்போது, கர்நாடக காங்கிரஸ் அரசு, ஜனவரி மாதத்துடன் 20 மாதங்களை பூர்த்தி செய்துள்ளது. தனது ஐந்து ஆண்டு ஆட்சி காலத்தில், 60 மாதத்தில், 20 மாதங்களை பூர்த்தி செய்து, மூன்றில் ஒரு பங்கு ஆட்சியை முடித்துள்ளது.
இன்னும் 40 மாதங்கள் பாக்கி உள்ளன. இவற்றில் தற்போது துவங்கியுள்ள இரண்டாவது 20 மாத ஆட்சி காலம், இந்த அரசுக்கு மிகவும் முக்கியமான காலகட்டமாகும்.
ஆட்சிக்கு வரும் அரசுகள், முதல் 20 மாதங்களை நல்லபடியாகவே முடித்துள்ளன. ஆனால், இரண்டாவது 20 மாத ஆட்சி காலத்தில் தான் அனைத்து கட்சிகளுமே தடுமாறி விடுகின்றன.
இதற்கு கட்சிக்குள் இருக்கும் குழப்பம், வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தாததே காரணம்.
இந்த தோல்விகளில் இருந்து மீள்வது, அந்தந்த அரசுகளுக்கு மிகவும் கடினமாக இருந்தது. 1985ம் ஆண்டுக்கு பின், கர்நாடகாவில் எந்த கட்சியும் தொடர்ந்து இரண்டாவது முறையாக பெரும்பான்மையை பெற முடியாததற்கும் இதுவே காரணம்.
செயல் திறன்
மாநிலத்தை ஆட்சி செய்யும் கட்சி, சிறப்பாக ஆட்சி செய்வதாக வாக்காளர்கள் நினைத்தால், அக்கட்சியை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்த்துவர். இதற்கு நாட்டின் பல மாநிலங்களில் நடந்த தேர்தல் முடிவுகள் உதாரணமாக இருந்துள்ளன.
லோக்சபா தேர்தலுக்கு பின், கர்நாடகாவில் 'லோக்நீதி' நடத்திய தேர்தலுக்கு பிந்தைய ஆய்வில், '2024 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் ஒன்பது இடங்களில் வெற்றி பெற்றது. சட்டசபை இடைத்தேர்தலில் அனைத்து இடங்களிலும் ஆளும் கட்சியான காங்கிரஸ் வெற்றி பெற்றது.
'இவை அனைத்திற்கும், அரசின் வாக்குறுதி திட்டங்கள் தான் காரணம். இவ்விரு தேர்தலில், பெண்கள் பெருமளவில் காங்கிரசுக்கு ஆதரவளித்து உள்ளனர்' என தெரியவந்தது.
அரசின் உயர் பதவியில் இருப்போர் ஊழல் குற்றச்சாட்டுகளோ அல்லது சர்ச்சையில் சிக்கும்போதோ, அத்தகையோர் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதை மக்களின் கவனிப்பர்.
கடந்த கால ஆட்சிகளிலும் கூட, நிர்வாகத்தில் கவனம் செலுத்த முடியாமல், தொடர் குற்றச்சாட்டுகளின் மீது கவனம் செலுத்தியதால் பல கட்சிகள் அடுத்த தேர்தலில் ஆட்சியை இழந்தன.
தற்போதைய காங்கிரஸ் அரசும் இதுபோன்ற சவாலை எதிர் கொண்டுள்ளது. அடுத்த 20 மாதங்களில் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளை அரசால் சமாளிக்க முடியுமா என்பது போக போக தெரியவரும்.
கட்சிக்குள் ஒற்றுமை
முந்தைய அரசை கவிழ்த்த மற்றொரு முக்கியமான விஷயம் உட்கட்சி பூசல். கட்சிக்குள் உள்ள ஒற்றுமையால், பல தேர்தல்களில் வெற்றி பெற்றதற்கான உதாரணங்கள் உள்ளன. ஆளும் கட்சிக்குள் உட்கட்சி பூசல் இருந்தால், தயவு தாட்சண்யமின்றி அக்கட்சியை, அதிகாரத்தில் இருந்து மக்கள் அகற்றிவிடுவர்.
மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள், 2013, 2023ல் ஒற்றுமையுடன் தேர்தல்களை எதிர்கொண்டனர். இதன் விளைவு, இவ்விரு காலத்திலும் ஆட்சியை பிடிக்க முடிந்தது.
ஆனால், தேர்தலுக்கு முன்னரே யார் முதல்வர் என்பதை அறிவிக்காமல், வெற்றி பெற்ற பின், எம்.எல்.ஏ.,க்கள் மூலம் முதல்வரை தேர்வு செய்யும் நடைமுறையை பின்பற்றியது.
தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ், இரு தலைவர்களுக்கும் (சித்தராமையா, சிவகுமார்) இடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி, முதல்வர் பதவி பிரச்னையை கட்சி மேலிடம் தீர்த்தது.
ஆனாலும் நீருபூத்த நெருப்பாக, கட்சிக்குள் இருக்கும் ஒற்றுமையின்மை அவ்வப்போது எட்டிப்பார்த்து வருகிறது.
இவ்விரு தலைவர்களின் ஆதரவாளர்கள் இடையில் திரைமறைவில் உள்குத்து வேலைகள் நடந்து வருகின்றன. உட்கட்சி பூசலை முறியடிக்க, கட்சி தலைமை அவ்வப்போது உயர்மட்ட குழு கூட்டம் நடத்தி, நெருப்பில் தண்ணீர் ஊற்றி வருகிறது.
தற்போது மூன்றாவதாக, சதீஷ் ஜார்கிஹோளி, பரமேஸ்வர் தலைமையில் ஒரு அணி உருவாகி உள்ளது. இவ்விரு தலைவர்களும் அவ்வப்போது ரகசிய கூட்டம் நடத்துவதும்; கேட்டால், 'ரகசிய கூட்டம் அல்ல; நாங்கள் இருவரும் ஒரே குடும்பம், நண்பர்கள்' என்று மழுப்புகின்றனர்.
தற்போது புதுடில்லியில் காங்கிரஸ் 'வாஷ் அவுட்' ஆகி உள்ளதால், மாநிலத்தில் மீண்டும் முதல்வர் மாற்றம் பிரச்னை மெல்ல எழ துவங்கி உள்ளது.
கடந்த பா.ஜ., ஆட்சி காலத்தில் கட்சிக்குள் ஒற்றுமையின்மை, கோபம், வெறுப்பு, அதிருப்தி என பல காரணங்களால் ஆட்சியை இழந்தது குறிப்பிடத்தக்கது.
சமூக நல்லிணக்கம்
கடைசி 20 மாதங்கள் தான், ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே 'டி 20' மற்றும் 'ஒரு நாள் கிரிக்கெட்' இறுதி போட்டி அளவில் பரபரப்பாக இருக்கும். ஆளும் கட்சியில் சிறு தவறு நிகழ்ந்தாலும், அதை பூதாகரமாக்க எதிர்க்கட்சிகள் கண்கொத்தி பாம்பாக கண் விழித்து பார்த்து கொண்டே இருப்பர்.
சமூக நல்லிணக்கம் என்பது சட்டம் - ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, சமூகத்தில் மத நல்லிணக்கம், உள்ளூர் அளவில் பல்வேறு ஜாதி குழுக்கள் இடையே சுமூக சூழ்நிலை ஏற்படுத்துவது; பல்வேறு சமூகங்கள் இடையே உள்ள பிளவுகளை சரி செய்வது; குறைகளை கட்டுக்குள் வைத்திருப்பதாகும்.
சமூக நல்லிணக்கம் சாத்தியமாக வேண்டுமானால், ஆட்சியில் இருக்கும் கட்சி, சமூகத்தில் பல்வேறு மக்கள் இடையே நம்பிக்கையை வளர்க்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த மூன்று கொள்கைகளையும் ஆட்சியில் இருக்கும் அரசு பின்பற்றுகிறதா என்று மாநில வாக்காளர்கள் பார்த்து கொண்டே இருப்பர்.
இதில் பாதிப்பு ஏற்பட்டால், அடுத்த ஐந்து ஆண்டு ஆட்சியை யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை ஓட்டுப்பதிவு நாளில் வாக்காளர் தீர்மானித்து விடுவர்
- நமது நிருபர் -.