கர்நாடகாவில் 'சக்தி' திட்டத்தில் 200 கோடி பெண்கள் இலவச பயணம்
கர்நாடகாவில் 'சக்தி' திட்டத்தில் 200 கோடி பெண்கள் இலவச பயணம்
ADDED : மே 03, 2024 10:59 PM
பெங்களூரு: கர்நாடகாவில் மே 1ம் தேதி வரை 'சக்தி' திட்டத்தின் கீழ், 200 கோடி பெண்கள், பஸ்களில் இலவசமாக பயணம் செய்துள்ளனர்.
'சக்தி' திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. மாநிலம் முழுதும் போக்குவரத்துத் துறைக்கு சொந்தமான நான்கு போக்குவரத்துக் கழகங்களிலும் ஆன்மிக ஸ்தலம், சுற்றுலா ஸ்தலங்களுக்கு பெண்கள் இலவசமாக சென்று வருகின்றனர்.
'சக்தி' திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது முதல், கடந்த மே 1ம் தேதி வரை 200.43 கோடி பெண்கள் இலவசமாக பயணம் செய்துள்ளனர். இதன் மூலம், 4,836 கோடி ரூபாய் மதிப்புள்ள இலவச டிக்கெட்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.
இதில், ஏற்கனவே 3,000 கோடி ரூபாய்க்கு மேல், நான்கு கழகங்களுக்கும் அரசு வழங்கி உள்ளது.
இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட மாதத்தில் மட்டும் 10 கோடி பெண்கள் பயணம் செய்தனர். அதைத் தொடர்ந்து நடப்பாண்டு ஜனவரி ஒவ்வொரு மாதமும் சராசரியாக 19 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பயணம் செய்து வந்தனர்.
ஆனால், பிப்ரவரி, மார்ச், ஏப்ரலில் மட்டும் 18 கோடியாக குறைந்துள்ளது. மேலும், தினமும் 63 லட்சம் பெண்கள் பயணித்து வந்த வேளையில், தற்போது 56 லட்சமாக குறைந்துள்ளது. இதற்கு, கோடை வெயில், குழந்தைகளுக்கு தேர்வு போன்ற காரணங்களால், பெண் பயணியர் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தெரிகிறது.