நீர்ப்பாசன திட்டத்துக்கு ரூ.200 கோடி; சென்னபட்டணாவில் துணை முதல்வர் சிவகுமார் உறுதி
நீர்ப்பாசன திட்டத்துக்கு ரூ.200 கோடி; சென்னபட்டணாவில் துணை முதல்வர் சிவகுமார் உறுதி
ADDED : ஜூன் 27, 2024 06:49 AM

ராம்நகர் : ''சென்னபட்டணாவில் நீர்ப்பாசன திட்ட மேம்பாட்டுக்கு, 200 கோடி ரூபாய் சிறப்பு மானியம் கொண்டு வருவேன். இத்தொகுதி எம்.எல்.ஏ.,வாக யார் வரவேண்டும் என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்,'' என துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
சென்னபட்டணா எம்.எல்.ஏ.,வாக இருந்த குமாரசாமி, மாண்டியா எம்.பி.,யாகி, மத்திய அமைச்சர் ஆகியுள்ளார்.
இதனால் காலியான சென்னபட்டணா தொகுதியை தக்க வைத்து கொள்ள குமாரசாமியும், கைப்பற்ற துணை முதல்வர் சிவகுமாரும் முயற்சிக்கின்றனர்.
இதனால், 'வீடு தேடி அரசு சேவை' திட்டத்தை, ராம்நகர் மாவட்டம் முழுதும் சிவகுமார் நடத்தி வருகிறார். சென்னபட்டணாவின் பேவூரு கிராமத்தில் நடந்த, 'வீடு தேடி அரசு சேவை' திட்ட நிகழ்ச்சியில் சிவகுமார் பேசியதாவது:
நீர்ப்பாசன மேம்பாட்டுக்காக 150 முதல் 200 கோடி ரூபாய் சிறப்பு மானியம் கொண்டு வருவேன். நான் மின் துறை அமைச்சராக இருந்தபோது, விவசாயிகளுக்கு நான் அளித்த பங்களிப்பு அனைவருக்கும் தெரியும்.
பக்தனுக்கும், கடவுளுக்கும் உள்ள உறவு தான், எனக்கும், விவசாயிகளுக்கும் இடையே உள்ளது. நான் எப்போதும் உங்களுடன் இருப்பேன். நான் அதிகாரிகளை அடிமைகளாக நடத்தியதில்லை.
அரசு வேலை, கடவுளுக்கு செய்யும் பணியாக கருதப்படுகிறது. உங்களின் முன்னாள் எம்.எல்.ஏ., உங்களை அடிமை என்று அழைத்துள்ளார். அதற்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
சென்னபட்டணாவில் பல இடங்களில் சாலை, மின் விளக்கு உட்பட பல பிரச்னைகள் உள்ளன. அதிகாரிகள், அவர்களின் பணியை செய்ய பணம் பெறுவதாக புகார்கள் வந்துள்ளன. அவை சரி செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.