200 யூனிட் மின்சாரம் இலவசம் மெஹபூபா கட்சி வாக்குறுதி
200 யூனிட் மின்சாரம் இலவசம் மெஹபூபா கட்சி வாக்குறுதி
ADDED : ஆக 25, 2024 01:48 AM

ஸ்ரீநகர், ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான, பி.டி.பி., எனப்படும், மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் அறிக்கையை, அக்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான மெஹபூபா முப்தி வெளியிட்டார்.
ஜம்மு - காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு, மூன்று கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. முதற்கட்ட தேர்தல் செப்., 18; இரண்டாம் கட்ட தேர்தல் செப்., 25 மற்றும் மூன்றாம் கட்ட தேர்தல், அக்., 1ல் நடக்கிறது. அக்., 4ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட பின் நடக்கும் முதல் தேர்தல் என்பதால், இந்த சட்டசபை தேர்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இந்த தேர்தலில், பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான, மக்கள் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் அறிக்கையை, முன்னாள் முதல்வரும், அக்கட்சி தலைவருமான மெஹபூபா முப்தி நேற்று வெளியிட்டார்.
ஸ்ரீநகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 'மக்கள் விருப்பங்கள்' என்ற பெயரில், தேர்தல் அறிக்கையை மெஹபூபா முப்தி வெளியிட்டார்.
முக்கிய அம்சங்கள்
1ஒவ்வொரு வீட்டிற்கும், 200 யூனிட் மின்சாரம் இலவசம்
2பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, ஆண்டுக்கு 12 காஸ் சிலிண்டர்கள்
3சொத்து வரி ரத்து, ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க நடவடிக்கை
4 பொது பாதுகாப்புச் சட்டம், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் ரத்து
5 அரசு டெண்டர்கள், சுரங்க ஒப்பந்தங்களில் உள்ளூர் மக்களுக்கே முன்னுரிமை.