ADDED : மே 30, 2024 09:56 PM

- நமது நிருபர் - தட்சிண கன்னடா மாவட்டம், பன்ட்வாலாவின் காரியங்காலா கிராமம் அருகில் போலாலியில் பால்குனி ஆற்றின் அருகில் 2,000 ஆண்டுகள் பழமையான ராஜராஜேஸ்வரி கோவில் உள்ளது.
தென் மாநிலங்களில், சக்தி வாய்ந்த, கருணை உள்ள மன்னராக இருந்தவர் சுரதா. அவரிடம் போரிட்டவர்கள் யாரும் வெற்றி பெற்றதில்லை. அவரது புகழ், தென் மாநிலங்கள் முழுதும் பரவியது.
முக்தி தேடி...
இதனால் வெறுப்படைந்த அவரது அரசவையில் உள்ள சில அமைச்சர்கள், எதிரி நாட்டு தலைவர்களுடன் கைகோர்த்தனர். எதிரிகளின் திடீர் படையெடுப்பால் தோற்கடிக்கப்பட்ட சுரதா, அங்கிருந்து தப்பி வனப்பகுதிக்குள் சென்றார்.
அதுபோன்று, மனைவி, மகனால் புறக்கணிக்கப்பட்ட வைசியரான, 'சமாதி' சாந்தாவும் அங்கு வந்தார்.
இருவரும் முக்தி தேடி, வனப்பகுதியில் சுமேத முனிவரின் ஆசிரமத்தில் தஞ்சம் அடைந்தனர். தங்களுக்கு உதவுமாறு, முனிவரிடம் முறையிட்டனர். முனிவரும், 'ராஜராஜேஸ்வரியின் மந்திரி உபேசத்தை' கொடுத்து, எப்போதும் பின்பற்றுமாறு அறிவுறுத்தினார்.
இருவரும் தியானம் செய்து கொண்டிருந்தபோது, அவர்களின் கனவில் தேவி தோன்றினார். இது முனிவருக்கும் தெரியவந்தது. அப்போது முனிவர், ஸ்ரீதேவியின் சிலையை வடிவமைக்க கூறினார். சுரதாவும், சமாதியும் அதை ஏற்று, நிறைவேற்றனர். இதனால் அவர்களின் பிரச்னை தீர்ந்ததாக, ஸ்ரீதேவி புராணத்தில் கூறப்படுகிறது.
முனிவரின் வழிகாட்டுதல்படி, முதலில் துர்கா பரமேஸ்வரி தேவி சிலை வடிவமைக்கப்பட்டது. அதை தொடர்ந்து ராஜராஜேஸ்வரி சிலை வடிவமைக்கப்பட்டது. அத்துடன், பத்ரகாளி, சுப்பிரமணிய சுவாமி, கணபதி விக்ரஹங்களும் தனி சன்னிதிகளில் இடம் பெற்றுள்ளன.
பத்ரகாளி
துர்கா பரமேஸ்வரி மற்றும் ராஜராஜேஸ்வரியைபக்தி சிரத்தையுடன் சேவித்தால், நினைத்த காரியம் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.
ராஜராஜேஸ்வரிக்கு இடதுபுறம், பத்ரகாளி எனப்படும் பிரதிரூபகாளி அம்மன் வீற்றறிருக்கிறார். ஞாயிறு, திங்கள், வியாழன் இரவுகளில், மகாபூஜைக்கு பின், இந்த அம்மனை வழிபடுகின்றனர்.
இந்நாட்களில் பத்ரகாளி, காயத்ரியை வழிபட்டு மறுநாள் ஸ்நானம் செய்பவர்களுக்கு மனவேதனை, கிருத்திகை தோஷம் நீங்கும். இதுபோன்று பல உதாரணங்கள் உள்ளன.
ராஜராஜேஸ்வரி ஊர்வலம் என்ற பெயரில் நடக்கும் திருவிழாவில், ராஜராஜேஸ்வரிக்கு வலது புறம் உள்ள சுப்பிரமணிய தேவி, சுப்பிரமணியருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
கோவில் ஆண்டு விழா, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஏழு நாட்கள் நடக்கும். இதில், ஐந்து நாட்கள் துலாபாரம் சேவை, ஊர்வலம் நடக்கும். தினமும் காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
ஸ்ரீதேவியின் சாபத்தால், ஆறாக மாறிய கந்தர்வ பெண்ணால், பால்குனி ஆறு புனிதமானது. இங்கு நீாரடும் பக்தர்களை, அம்மன் பாதுகாப்பதாக நம்பப்படுகிறது.
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து விமானத்தில் செல்பவர்கள், மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 17 கி.மீ., பயணிக்கலாம். ரயிலில் செல்பவர்கள் மங்களூரு மத்திய ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 19 கி.மீ., பயணித்தும்; பஸ்சில் செல்பவர்கள், மங்களூரு நகர பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து டாக்சி, ஆட்டோக்களில் செல்லலாம்.
மேலும் விபரங்களுக்கு 08242266141 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.