ADDED : மே 31, 2024 12:27 AM

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் கோவிலுக்கு வந்தவர்களின் பஸ் நேற்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில், 22 பக்தர்கள் உயிரிழந்தனர்.
ஜம்மு - காஷ்மீரின் ரியாசி மாவட்டம், சங்கர் பகுதியில் மலை மீது பிரசித்தி பெற்ற சிவகோரி எனும் சிவன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
நேற்று உத்தர பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தானில் இருந்து 50 பக்தர்கள் பஸ்சில் இந்த கோவிலுக்கு சென்றனர்.
ஜம்மு -- பூஞ்ச் தேசிய நெடுஞ்சாலை வழியாகச் சென்ற பஸ், அக்னுார் என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்து, பல முறை உருண்டு அடிவாரத்தை அடைந்தது.
இந்த விபத்தில், 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்; 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்அடைந்தனர்.
சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள், தீயணைப்பு துறை மற்றும் ராணுவத்திற்கு தகவல் அளித்தனர்.அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். காயமடைந்த பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.