கேரளாவில் 6 ஆண்டுகளில் 'நிபா' வைரஸ் பாதிப்பால் 22 பேர் பலி
கேரளாவில் 6 ஆண்டுகளில் 'நிபா' வைரஸ் பாதிப்பால் 22 பேர் பலி
ADDED : செப் 17, 2024 08:13 PM
மூணாறு:நாட்டில் முதன்முதலாக கேரளாவில் கோழிக்கோட்டில் 2018 மே 19ல் 'நிபா 'வைரஸ் உறுதி செய்யப்பட்டது. அப்போது, அந்நோயால் பாதிக்கப்பட்டு சுகாதாரத்துறை ஊழியர்கள் உட்பட 17 பேர் இறந்தனர். 2018க்கு பின் 2019ல் எர்ணாகுளத்தில் ஒருவருக்கு 'நிபா' வைரஸ் உறுதி செய்யப்பட்டது.
தீவிர சிசிச்சை மூலம் குணமடைந்தார். கோழிக்கோடு சூலுாரைச் சேர்ந்த 13 வயது சிறுவன், 2021ல் 'நிபா' வைரஸ் பாதித்து இறந்தார். கோழிக்கோட்டில் 2023ல் மீண்டும் ஆறு பேர் 'நிபா'வால் பாதிக்கப்பட்டனர். அதில், மருதோங்கரை, ஆயஞ்சேரி ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.
இறுதியாக, மலப்புரம் மாவட்டத்தில் பாண்டிக்காடு பகுதியில் ஜூலை 20ல் ஒன்பதாம் வகுப்பு மாணவரும், வாண்டூர் பகுதியைச் சேர்ந்த 24 வயது வாலிபர் செப்., 9ம் தேதியும் இறந்தனர். இவ்வாறு ஆறு ஆண்டுகளில் 'நிபா' வைரஸ் பாதிப்பால் 22 பேர் இறந்த நிலையில் ஏழு பேர் குணமடைந்தனர்.
'நிபா' வைரஸ் உறுதி செய்யப்பட்ட மேற்கு வங்கம், மலேஷியா, வங்கதேசம் ஆகிய நாடுகளில், அவை உருவான இடங்களை கண்டறிந்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், கேரளாவில் நோய் பரவிய போதும், உருவான இடத்தை இதுவரை கண்டறிய முடியாமல் சுகாதாரத்துறையினர் தவித்து வருகின்றனர். வவ்வால்கள் மூலம் நோய் பரவியதாக கூறினாலும், அதை உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.