ADDED : மார் 12, 2025 05:50 AM
கதக்; மணல் கடத்தி வந்த லாரி டிரைவரை போலீசார் அடித்துக் கொன்றதாக கூறி, லட்சுமேஸ்வர் போலீஸ் நிலையத்திற்கு தீ வைத்த 23 பேர், குற்றவாளிகள் என, நீதிபதி அறிவித்தார். தண்டனை விபரம் 24ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
கதக் லட்சுமேஸ்வர் தாலுகா பட்டூர் கிராமத்தில் வசித்தவர் சிவப்பா டோனி. லாரி டிரைவர். கடந்த 2017, பிப்ரவரி 5ம் தேதி, லாரியில் மணல் கடத்தி வந்தார். வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், லாரியை பறிமுதல் செய்தனர். சிவப்பாவை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். மயக்கம் போட்டு விழுந்தார்; மருத்துவமனையில் உயிரிழந்தார்.
போலீசார் அடித்து கொன்றதாக கூறி, சிவப்பா உடலை லட்சுமேஸ்வர் போலீஸ் நிலையம் முன்பு, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
அப்போது போலீஸ் நிலையத்திற்கும், வெளியே நின்ற வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இதுதொடர்பாக 112 பேர் மீது வழக்குபதிவானது. கதக் 2வது மாவட்ட கூடுதல் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையில் இருந்த போதே 8 பேர் இறந்துவிட்டனர். மேலும் 104 பேர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடந்தது. விசாரணை முடிந்த நிலையில், வழக்கில் 23 பேர் குற்றவாளிகள் என்றும், வரும் 24ம் தேதி தீர்ப்பு விபரம் அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி கூறினார்.
சாட்சியங்கள் இல்லாததால் வழக்கில் இருந்து 81 பேரை விடுவித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.