முறைகேடாக கழிவுநீர் இணைப்பு 3,000 பேரிடம் ரூ.24 கோடி வசூல்
முறைகேடாக கழிவுநீர் இணைப்பு 3,000 பேரிடம் ரூ.24 கோடி வசூல்
ADDED : ஜூன் 27, 2024 06:33 AM
பெங்களூரு : குடிநீர் வடிகால் வாரியம் அனுமதியின்றி, முறைகேடாக கழிவுநீர் குழாய் இணைப்பு கொடுத்திருந்த 3,000 பேரிடம் இருந்து, 24.27 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு நகரில், அவ்வப்போது சாலைகளில் திடீரென பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீரை அகற்றுவது குடிநீர் வடிகால் வாரியத்துக்கு தலைவலியாக உள்ளது. இதற்கான காரணத்தை அறிய, நகரில் 18,367 இடங்களில் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இதில், 2,929 வீடு, வர்த்தக கட்டடங்கள், முறைகேடாக, கழிவுநீர் குழாய் இணைப்பு கொடுத்திருப்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 24.27 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி முறைகேடாக இணைக்கப்பட்ட கழிவுநீர் குழாயை, அதிகாரபூர்வமாக இணைக்க, வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, வரும் நாட்களில், நகர் முழுதும் இதுபோன்று கணக்கெடுப்பு நடத்துவர். முறைகேடாக இணைப்பு ஏற்படுத்தி கொண்டவர்களிடம் இருந்து கட்டணம் வசூலித்து, முறைப்படி அனுமதி அளிக்கப்படும்.
இது தொடர்பாக வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் தலைமையில், முறைகேடாக இணைக்கப்பட்ட கழிவுநீர் குழாய் இணைப்புகளை கண்காணிக்க துவக்கி உள்ளனர்.
ராம்பிரசாத் மனோகர் கூறுகையில், ''அனுமதி பெறாத கழிவுநீர் குழா் இணைப்புகளை, மக்கள் தாமாக முன்வந்து, முறைப்படுத்த வேண்டும். அனுமதியின்றி, கழிவுநீர் குழாய் அமைத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
காவிரி நீர் இணைப்பு பெற விண்ணப்பிக்கும் போதே, கழிவுநீர் அமைப்பதற்கான அனுமதி வழங்கப்படும். காவிரி நீர் இணைப்பு இல்லாதவர்கள், குடிநீர் வடிகால் வாரியத்தில் முறைப்படி விண்ணப்பித்து, கழிவுநீர் இணைப்புக்காக அனுமதி பெற வேண்டும்.