ADDED : செப் 14, 2024 11:37 PM
பெலகாவி : ஆண்டில் பத்து நாட்கள் மட்டுமே செயல்படும், பெலகாவி சுவர்ண விதான்சவுதா கட்டடத்தின் நிர்வகிப்புக்கு, ஆண்டுதோறும் 2.5 கோடி ரூபாய் செலவாகிறது.
கர்நாடகாவின், வட மாவட்டங்களை மேம்படுத்த வேண்டும், இங்குள்ள மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில், பெலகாவியில், நுாற்றுக்கணக்கான கோடி ரூபாயில், சுவர்ண விதான்சவுதா கட்டடம் கட்டப்பட்டது. 2012 அக்டோபர் 11ல், அன்றைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி திறந்து வைத்தார்.
இது நான்கு மாடிகள் கொண்ட கட்டடம். 60,398 சதுர அடி பரப்பளவு கொண்டது. விசாலமான சட்டசபை, மேல்சபை கவுன்சில் ஹால்கள், அமைச்சரவை, எம்.எல்.ஏ.,க்கள் கூட்டங்கள் நடக்கும் ஹால்கள் உள்ளன.
அனைத்து வசதிகளும் இங்குள்ளன. பெங்களூரிலிருந்து சில துறைகளின் அலுவலகங்கள், சுவர்ண விதான்சவுதாவுக்கு மாற்றப்பட்டன.
ஆனால், விதான்சவுதா கட்டியதற்கான நோக்கம் நிறைவேறவில்லை.
ஆண்டுக்கு பத்து நாட்கள் மட்டும், குளிர்க்கால கூட்டம் நடக்கும் போது, சுவர்ண விதான்சவுதா கட்டடம் பரபரப்பாக இயங்குகிறது. மற்ற நாட்களில் வெறிச்சோடி காணப்படுகிறது.
இந்த கட்டடம் மக்களுக்கு உதவியாக இல்லை. கட்டடத்தின் நிர்வகிப்புக்கு, ஆண்டுதோறும் 2.5 கோடி ரூபாய் செலவாகிறது.
இது தொடர்பாக, பெலகாவி மாவட்ட கலெக்டர் முகமது ரோஷன் கூறியதாவது:
குளிர்க்கால கூட்டத்துக்கு, பெலகாவியின் சுவர்ண விதான்சவுதா தயாராகிறது. சுவர்ண சவுதா கட்டட நிர்வகிப்புக்கு ஆண்டுதோறும், 2.5 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இந்த நிதியை மாநில அரசு தாமதமின்றி வழங்குகிறது.
குளிர்க்கால கூட்டத்துக்கு முன்னேற்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறோம். இதற்கு தேவையான நிதி, மாவட்ட நிர்வாகத்திடம் நிதி உள்ளது.
இவ்வாறு அவர்கூறினார்.