ADDED : ஆக 08, 2024 10:19 PM
பெங்களூரு : அரசின் குளறுபடியால், கடந்த 15 மாதங்களாக 25 அதிகாரிகள், வேலை செய்யாமல் ஊதியம் பெறுகின்றனர்.
கர்நாடக மாநில பா.ஜ., அரசு, 2023 மார்ச், ஏப்ரலில் ஐந்து நகர திட்ட இயக்குனர்கள், ஆறு உதவி இயக்குனர்கள், 14 இணை இயக்குனர்கள் உட்பட, மொத்தம் 25 அதிகாரிகளை இடம் மாற்றி உத்தரவிட்டது. இவர்களின் இடங்களுக்கு, வேறு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஆனால் இடம் மாற்றப்பட்ட அதிகாரிகள், எந்த இடத்தில் பணியாற்ற வேண்டும் என்பதை, அரசு கூறவில்லை.
கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்த காங்., அரசும் இவர்களுக்கு எந்த பணியிடத்தையும் ஒதுக்கவில்லை. இதனால், இந்த அதிகாரிகள், நகர வளர்ச்சி துறை அமைச்சகத்தில் கையெழுத்திடுகின்றனர். வேலை இல்லாமல் 15 மாதங்களாக காலம் கடத்துகின்றனர். பணியிடத்தை சுட்டி காண்பிக்காத அரசு, மாதந்தோறும் இவர்களுக்கு ஊதியம் வழங்குகிறது. இதனால், அரசுக்கு ஆண்டுதோறும், 2.40 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.
அதிகாரிகளை வேலை இல்லாமல் வைத்திருந்தால், அரசுக்கு தான் நஷ்டம். திட்டங்களுக்கு பின்னடைவு ஏற்படும். பொது மக்களின் பணிகளுக்கும் இடையூறாக இருக்கும். உடனடியாக அதிகாரிகளை, தேவையான பணிகளுக்கு நியமிக்கும்படி, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.மாநில அரசு மற்றொரு குளறுபடியும் செய்துள்ளது. ஊழல் வழக்கில் சிக்கியவர்கள், லஞ்சம் வாங்கும் போது பிடிபட்டவர்கள், வருவாய்க்கும் அதிகமான சொத்து குவித்து, 'சஸ்பெண்ட்' ஆன அதிகாரிகளை, மீண்டும் முக்கியமான பணியிடங்களில் நியமித்துள்ளதாகவும், சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.