தங்கவயலில் 27 கவுன்சிலர்களுக்கு தலா ரூ.2.50 லட்சம் 'அட்வான்ஸ்'
தங்கவயலில் 27 கவுன்சிலர்களுக்கு தலா ரூ.2.50 லட்சம் 'அட்வான்ஸ்'
ADDED : ஆக 18, 2024 11:37 PM
தங்கவயல்: தங்கவயல் நகராட்சி தலைவர், துணை தலைவர் தேர்தலில், காங்., வேட்பாளர் வெற்றிக்காக, முதல் கட்டமாக 27 கவுன்சிலர்களுக்கு தலா 2.50 லட்சம் ரூபாய் நேற்று பட்டுவாடா செய்யப்பட்டது.
தங்கவயல் நகராட்சியின், இரண்டாம் கட்ட தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் 22ம் தேதி பிற்பகல் நடக்கிறது. தலைவர் பதவிக்கு எஸ்.சி., பெண், துணைத் தலைவர் பதவிக்கு பிற்படுத்தப்பட்டோர் ஏ பிரிவு என இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
நகராட்சியில், 35 கவுன்சிலர்கள் உள்ளனர். இவர்களில் காங்கிரஸ் -14, சுயேச்சைகள்- 15, பா.ஜ., -3, இ.கு.க., - ம.ஜ.த., - சி.பி.எம்., தலா -1 உள்ளனர். பெரும்பாலான சுயேச்சைகள் மற்றும் ஒரு ம.ஜ.த., கவுன்சிலர் காங்கிரசின் நிழலில் உள்ளனர். எனவே, மீண்டும் நகராட்சி நிர்வாகம், காங்கிரஸ் வசமே வரும் என்பது உறுதி.
காங்கிரசில் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு யார் வேட்பாளர் என முடிவு செய்ய, நேற்று கோலார் -- முல்பாகல் நெடுஞ்சாலையில் உள்ள ரிசார்ட்டில், தங்கவயல் தொகுதி காங்., - எம்.எல்.ஏ., ரூபகலா தலைமையில், நேர்காணல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டது.
ஆனால், திடீரென்று நேற்று முன்தினம், தங்கவயல் விவேக் நகரில் உள்ள ரூபகலா எம்.எல்.ஏ., அலுவலகத்திலேயே நேற்று காலை 11:00 மணிக்கு கூட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி, காங்கிரஸ் மற்றும் ஆதரவு சுயேச்சை கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நேற்று மதியம் 11:50 மணிக்கு, ரூபகலா தலைமையில் ஆலோசனை கூட்டம் துவங்கியது. காங்கிரசின் 1வது வார்டு கவுன்சிலர் மாணிக்கம் தவிர மற்ற 13 கவுன்சிலர்களும், ஆதரவு சுயேச்சை கவுன்சிலர்கள், 13 பேர், ம.ஜ.த.,வின் வேணுகோபால் ஆகிய 27 பேர் கூட்டத்தில் ஆஜர் ஆகினர்.
அப்போது, 'ரூபகலா எடுக்கும் முடிவை ஏற்க விரும்பாதவர்கள், கூட்டத்தில் இருந்து வெளியேறலாம்' என்று அறிவிக்கப்பட்டது.ஆனால், ஒருவரும் வெளியேறவில்லை. 27 கவுன்சிலர்களும் ரூபகலா முடிவை ஏற்பதாக தெரிவித்தனர். கூட்டம், பிற்பகல் 1:50 மணி வரை நடந்தது.
இறுதியாக, 'வியாழக்கிழமை அன்று காலையில் யார் வேட்பாளர் என்று அறிவிக்கப்படும். அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும். அனைவரும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். முதல கட்டமாக, தலா 2.50 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. பெற்றுக் கொள்ளுங்கள்' என தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்ற, 27 கவுன்சிலர்களுமே தலா 2.50 லட்சம் ரூபாயை வேண்டாம் என சொல்லாமல் பெற்றுக் கொண்டு, மகிழ்ச்சியுடன் கிளம்பினர்.
கவுன்சிலர்களுக்கு பெரிய தொகையை வழங்க யார் முன்வருகின்றனரோ, அவர்கள் வேட்பாளராக அறிவிக்கப்படுவர். தலைவர் பதவிக்கு இடஒதுக்கீட்டின்படி ஆறு பேருக்கு தகுதி இருந்தும், இது வரை மூன்று பேர் வாய்ப்பு கேட்டுஉள்ளனர்.

