90 சீட்டுக்கு 2,556 பேர் போட்டி; தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே இடியாப்ப சிக்கலில் காங்.,
90 சீட்டுக்கு 2,556 பேர் போட்டி; தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே இடியாப்ப சிக்கலில் காங்.,
ADDED : ஆக 16, 2024 11:07 AM

சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவதற்காக 2,500க்கும் மேற்பட்டோர் விருப்பமனு கொடுத்திருப்பது அக்கட்சியின் தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று தேர்தல் தேதி
ஹரியானா, மஹாராஷ்டிரா சட்டசபைகளின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதம் முடிவடைகிறது. எனவே, ஜம்மு காஷ்மீர் உள்பட 3 மாநிலங்களுக்கும் சேர்த்து தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று (ஆகஸ்ட் 16) மதியம் 3 மணிக்கு ஜம்மு 3 மாநில சட்டசபைகளுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது.
ஹரியானா
90 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய ஹரியானாவுக்கு அக்டோபர் மாதம் தேர்தல் நடக்கும் என்று தெரிகிறது. தேர்தலுக்கான பணிகளை அம்மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ் முன்கூட்டிய மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை கடந்த 10ம் தேதி வரை அக்கட்சியின் மாநில தலைமை நிர்வாகிகளிடம் இருந்து பெற்றது.
அதில், மொத்தம் உள்ள 90 தொகுதிகளுக்கு, 2,556 பேர் விருப்பமனுக்களை அளித்துள்ளனர். இது அக்கட்சியினருக்கு இடியாப்ப சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் பா.ஜ.,வுக்கு தாவி வரும் நிலையில், இத்தனை விருப்ப மனுக்களில், யாருக்கு சீட் கொடுப்பது என்பது தெரியாமல் திணறி வருகின்றனர்.
சீனியர்கள்
குருக்ஷேத்ரா மாவட்டம் ஷாகாபாத் தொகுதியின் ஜனநாயக் ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ., ராம் கரன் காலா, காங்கிரஸ் சார்பில் போட்டியிட முயற்சித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதேபோல, பிவானி - மகேந்திரகர் தொகுதியின் 3 முறை பா.ஜ., எம்.பி.,யான தரம்பீர் சிங்கின் சகோதரரான ராஜ்பீர் சிங் லாலா, காங்கிரஸ் சார்பில் பிவானி மாவட்டம் தோஷம் தொகுதியில் போட்டியிட முயற்சித்து வருகிறார். பா.ஜ., எம்.பி.,யான தனது சகோதரரின் ஆதரவை வைத்து வெற்றி பெற காய் நகர்த்தி வருவதாகக் கூறப்படுகிறது.

