2,820 ஹோட்டல்களில் சோதனை ரூ.6.31 லட்சம் அபராதம் விதிப்பு
2,820 ஹோட்டல்களில் சோதனை ரூ.6.31 லட்சம் அபராதம் விதிப்பு
ADDED : செப் 01, 2024 11:23 PM
பெங்களூரு: உணவு பொருட்கள் தரம் குறித்து கர்நாடகா மாநிலம் முழுதும் நடந்த ஆய்வில், துாய்மையை பராமரிக்காதது உட்பட பல்வேறு காரணங்களுக்காக 6.31 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல், ரெஸ்டாரென்ட்களில் உணவின் தரம் சரியில்லை என்று மாநில சுகாதார துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, மாநிலம் முழுதும் ஆக., 30, 31ம் தேதிகளில் சோதனை நடத்தப்படும் என்று சுகாதார துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்திருந்தார்.
இதன்படி, இரண்டு நாட்கள் தொடர்ந்து இந்திய உணவு பாதுகாப்பு, தர கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் பல்வேறு தெருவோர டிபன் கடைகள் உட்பட ஹோட்டல்கள், ரெஸ்டாரென்ட்கள் என 2,820 இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வில் 666 கடைகள் உரிமம் அல்லது பதிவு செய்யவில்லை. 1080 கடைகளில் துாய்மையை பராமரிக்கவில்லை. 24 கடைகளில் உணவு பொட்டலங்கள் குறித்த தகவல் இல்லை. உணவு பாதுகாப்பு, தரம் குறித்த விதிகளை பின்பற்றவில்லை என்ற காரணத்தால், 6.31 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
'சேகரிக்கப்பட்ட உணவு பொருட்களின் மாதிரிகள், ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அறிக்கை கிடைத்த பின், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.