குமாரசாமி குடும்ப சொத்துகளை வைத்து 3 பட்ஜெட் போடலாம்: ஜமீர் அகமது கான்
குமாரசாமி குடும்ப சொத்துகளை வைத்து 3 பட்ஜெட் போடலாம்: ஜமீர் அகமது கான்
ADDED : ஆக 04, 2024 11:12 PM

ராம்நகர்: ''மத்திய அமைச்சர் குமாரசாமியின் குடும்ப சொத்துகளை வைத்து, மூன்று பட்ஜெட் தாக்கல் செய்யலாம்,'' என்று, அமைச்சர் ஜமீர் அகமதுகான் கூறி உள்ளார்.
ராம்நகர் சென்னப்பட்டணாவில் காங்கிரஸ் சார்பில் நேற்று நடந்த மக்கள் இயக்க மாநாட்டில், வீட்டு வசதி துறை அமைச்சர் ஜமீர் அகமதுகான் பேசியதாவது:
கடந்த 2018 சட்டசபை தேர்தலில், ம.ஜ.த., வெறும் 37 இடங்களில் தான் வெற்றி பெற்றது. கூட்டணி வைக்க எங்களுடன் வந்தனர். குமாரசாமியை அருகில் இருந்து பார்த்து இருக்கிறேன். நேரத்திற்கு ஏற்ப அவர் மாற கூடியவர். கூட்டணி வேண்டாம் என்று, எங்கள் தலைவர்களிடம் கூறினேன்.
அரசியல் வாழ்வு
ஆனாலும் வேறு வழியின்றி ம.ஜ.த.,வுடன் கூட்டணி வைக்கப்பட்டது. நான் சொன்னது போல், குமாரசாமி அவரது வேலையை காண்பித்தார். ராம்நகர் தனக்கு அரசியல் வாழ்வு கொடுத்த மாவட்டம் என்று, அவர் கூறி வருகிறார்.
இரண்டு முறை அவர் முதல்வராக இருந்த போது, ராம்நகர் மக்களுக்கு எத்தனை வீடுகள் ஒதுக்கி உள்ளார் என சொல்லட்டும். இதுபற்றி பொது மேடையில் விவாதிக்க நான் தயார்.
பெங்களூரு ரூரல் எம்.பி.,யாக இருந்த சுரேஷ் நன்றாக பணியாற்றினார். தொகுதி மக்களுக்காக இரவு, பகல் பாராமல் உழைத்தார். அவர் தோற்றதால் எனது வயிறு எரிகிறது.
சுரேஷ் செய்த பணிகளில் ஒரு சதவீதம் வேலை கூட, குமாரசாமி செய்தது இல்லை.
சென்னப்பட்டணா தொகுதியில் நிறைய வளர்ச்சி பணிகள் செய்ய வேண்டும் என்று, கர்நாடக அரசிடம் சுரேஷ் கோரிக்கை வைத்து உள்ளார். நாங்கள் இருக்கும் வரை சித்தராமையா, சிவகுமாரை எதிர்க்கட்சிகள் ஒன்றும் செய்ய முடியாது.
சிவகுமார்
சிவகுமாரின் சொத்து விபரங்களை வெளியிடுவேன் என்று கூறும் குமாரசாமியின் குடும்ப உறுப்பினர்களின் சொத்துகளை வைத்து, மூன்று பட்ஜெட் தாக்கல் செய்யலாம். குமாரசாமிக்கு உண்மையிலேயே மக்கள் மீது அன்பு இருந்தால், அவர் சேர்த்த சொத்துகளை மக்களுக்கு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.