ADDED : ஆக 27, 2024 04:37 AM
கொப்பால் : கொப்பால் மாவட்டம், கங்காவதியின் ஹளேசமுத்திரா கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சிவபசப்பா சஹாரி. நேற்று காலை வழக்கம் போல், தொழுவத்தில் உள்ள நான்கு மாடுகளுக்கு தீவனம் வைத்தார். பின், தண்ணீர் ஊற்றினார்.
தண்ணீர் குடித்த கால்நடைகள் வாயில் இருந்து திடீரென ரத்தம் வடிந்தது. மூச்சு திணறல் ஏற்பட்டு கீழே விழுந்தன. பதறிய விவசாயி சிவபசப்பா, கால்நடை மருத்துவர் சன்னபசப்பாவுக்கு தகவல் தெரிவித்தார்.
அவர் வருவதற்குள் கன்றுக்குட்டி உட்பட மூன்று மாடுகள் உயிரிழந்தன. மற்றொரு மாட்டுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதால், உயிர் தப்பியது. ரசாயனம் கலந்த தண்ணீரை குடித்ததால் இறந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
கால்நடை டாக்டர் சன்னபசப்பா கூறுகையில், ''கால்நடை துறை சார்பில் ஒரு வாரத்திற்குள், இறந்த மாட்டுக்கு 10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை நிவாரணம் வழங்கப்படும்,'' என்றார்.

