ADDED : மார் 23, 2024 06:57 AM
துமகூரு: எரிந்த காருக்குள் இருந்து, மூன்று பேரின் உடல் மீட்கப்பட்டு உள்ளது.
துமகூரு அருகே கோரா கிராமத்தில் குச்சங்கி ஏரி உள்ளது. தண்ணீர் இன்றி அந்த ஏரி, வறண்டு கிடக்கிறது. நேற்று காலை அந்த ஏரிக்குள் எரிந்த நிலையில், ஒரு கார் நின்றது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், கோரா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று பார்த்த போது, காருக்குள் இரண்டு பெண்கள், ஒரு ஆண் உடல் கருகி இறந்து கிடந்தனர். மூன்று பேரின் உடல்களும் மீட்கப்பட்டன.
கார் முழுதும் எரிந்ததால், வாகன பதிவெண் சரியாக தெரியவில்லை. இதனால் மூன்று பேரும் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்று, கண்டுபிடிக்க முடியவில்லை.
தற்கொலை செய்யும் நோக்கில், காரின் ஜன்னால் கண்ணாடிகளை அடைத்துவிட்டு, காருக்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனரா அல்லது யாராவது மூன்று பேரையும் காருடன் எரித்து கொன்றனரா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.
