ADDED : பிப் 22, 2025 11:42 PM

இடுக்கி: கேரளாவில், பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒலிம்பிக் தடகள வீராங்கனை பீனமோலின் தங்கை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.
கேரளாவில் இடுக்கி மாவட்டத்தின் பனியார்குட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ரீனா, 48. இவர், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற தடகள வீராங்கனை பீனமோலின் தங்கை.
ரீனாவும், அவரது கணவர் போஸ், 55, மற்றும் உறவினர் ஆபிரஹாம், 50, ஆகிய மூன்று பேரும் முள்ளகன்னம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்று முன்தினம் ஜீப்பில் சென்றனர்.
மீண்டும், தங்கள் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்குள்ள வளைவு ஒன்றில் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக ஜீப் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மீட்புக்குழுவினர் மற்றும் உள்ளூர் மக்களின் ஒத்துழைப்புடன் பள்ளத்தில் விழுந்தவர்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
நீண்டநேரம் போராடி, படுகாயங்களுடன் மூன்று பேரையும் மீட்டனர். இவர்களில், ரீனா மற்றும் அவரது கணவர் போஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் உறவினர் ஆபிரஹாம், எர்ணாகுளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு உயிரிழந்தார்.