மாண்டியாவில் சட்டவிரோத கருக்கலைப்பு 2 அரசு ஊழியர்கள் உட்பட 3 பேர் கைது
மாண்டியாவில் சட்டவிரோத கருக்கலைப்பு 2 அரசு ஊழியர்கள் உட்பட 3 பேர் கைது
ADDED : மே 07, 2024 06:20 AM
மாண்டியா: சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்ய முயற்சித்த சுகாதார மருத்துவமனையின், 'டி' குரூப் ஊழியர்கள் இருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இரண்டு ஸ்கேனிங் மையங்களுக்கு, 'சீல்' வைத்தனர்.
கர்ப்பிணி வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக உள்ளதா என்பதை மட்டுமே ஆய்வு செய்ய அனுமதி உள்ளது. ஆனால், சட்ட விரோதமாக கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்து, பெண் என்றால் கருக்கலைப்பு செய்து விடுகின்றனர்.
கர்நாடகாவில் கடந்தாண்டு நடந்த சட்ட விரோத கருக்கலைப்பு சம்பவம், நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக டாக்டர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். இதில் மாண்டியாவில் தான் இதற்கு மையமாக இருந்தது தெரியவந்தது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மீண்டும் புகார்
இந்நிலையில், மீண்டும் மாண்டியாவில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு நடப்பதாக, சுகாதார துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. பாண்டவபுரா தாலுகா மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஆனந்த் வீட்டில் நேற்று முன்தினம் இரவு அதிகாரிகள், 'ரெய்டு' நடத்தினர்.
அப்போது, அங்கு மைசூரை சேர்ந்த பெண் ஒருவருக்கு சட்ட விரோதமாக கருக்கலைப்பு நடத்தி கொண்டிருந்தது தெரியவந்தது. உடனடியாக அதை தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக, 'டி குரூப்' ஊழியர்களான ஆனந்த், மருத்துவமனை ஊழியர் அஸ்வினி, மேலும் ஒரு பெண் என மூன்று பேரை கைது செய்தனர்.
2 மையங்களுக்கு சீல்
இதையடுத்து, நாகமங்களா அரசு மருத்துவமனையில் உள்ள லட்சுமி டயாக்னாஸ்டிக் மையம், காவேரி ஸ்கேனிங் மையங்களிலும் சோதனை நடத்தினர்.
அங்கிருந்த ஊழியர்களிடம், ஆவணங்களை காட்ட கூறினர். அவர்கள் மறுத்ததால், அதிகாரிகளே, அங்கிருந்த கம்ப்யூட்டர்களை ஆய்வு செய்தனர்.
அதில், லட்சுமி டயாக்னாஸ்டிக் மையத்தில் இரண்டு ஆண்டுகள்; காவேரி ஸ்கேனிங் மையத்தில் மூன்று மாதங்களுக்கான தரவுகளை 'டெலீட்' செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இரு மையங்களையும் மூடி சீல் வைத்த அதிகாரிகள், அதன் உரிமையாளர் களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.