டில்லியில் 3 மாணவர்கள் பலியான சம்பவம்: பார்லி.,யில் விவாதம்
டில்லியில் 3 மாணவர்கள் பலியான சம்பவம்: பார்லி.,யில் விவாதம்
UPDATED : ஜூலை 29, 2024 01:46 PM
ADDED : ஜூலை 29, 2024 01:42 PM

புதுடில்லி: டில்லியில் தனியார் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய கட்டடத்தில் வெள்ளம் புகுந்ததில் மூன்று மாணவர்கள் பலியான விவகாரம் குறித்து, லோக்சபாவில் காரசார விவாதம் நடந்தது.
அப்போது சமாஜ்வாதி கட்சி எம்பி அகிலேஷ் யாதவ் பேசியதாவது: இது ஒரு வேதனையான சம்பவம். இதற்கு அதிகாரிகள் தான் பொறுப்பு. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது தான் கேள்வி. உ.பி.,யில் சட்டவிரோத கட்டடங்கள் புல்டோசர் மூலம் தகர்க்கப்படுகின்றன. அதேபோல், டில்லியில் சட்டவிரோத கட்டடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அகிலேஷ் யாதவ் பேசினார்.
கனவுகள் சிதைந்துவிட்டன
காங்கிரஸ் எம்பி சசி தரூர் பேசியதாவது: யு.பி.எஸ்.சி., தேர்வில் தேர்ச்சி பெற்று தேசத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்ற கனவுகள் அனைத்தும் சிதைந்துவிட்டன. குடும்பத்தின் நம்பிக்கைகள் சிதைந்து விட்டன. மாணவர்களின் உயிரிழப்புக்கு எந்த இழப்பீடும் போதுமானதாக இருக்காது. மாநகராட்சிக்கும் பொறுப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அலட்சியம் தான் காரணம்
பா.ஜ., எம்.பி., பன்சூரி ஸ்வராஜ் பேசியதாவது: உயிரிழந்த 3 மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு டில்லியில் தங்கி இருந்து பயிற்சி எடுத்து வந்துள்ளனர். இந்த மாணவர்களின் உயிரிழப்பிற்கு, டில்லி அரசின் அலட்சியம் தான் காரணம். ஒரு தசாப்த காலமாக, ஆம் ஆத்மி கட்சி டில்லியில் அதிகாரத்தை அனுபவித்து வருகிறது. மக்களுக்காக எதையும் செய்யவில்லை. மாநகராட்சி கடந்த 2 ஆண்டுகளாக ஆம் ஆத்மியின் கீழ் உள்ளது.
குழு அமையுங்கள்!
பழைய ராஜீந்தர் நகர் குடியிருப்பாளர்கள் தொடர்ந்து உள்ளூர் எம்.எல்.ஏ., கவுன்சிலர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தை விசாரிக்க உள்துறை அமைச்சகம் ஒரு குழுவை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.