ஜம்மு - காஷ்மீரில் என்கவுன்டர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு - காஷ்மீரில் என்கவுன்டர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ADDED : ஜூன் 27, 2024 12:15 AM

தோடா: ஜம்மு - காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் கடந்த 11 மற்றும் 12ம் தேதிகளில் அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தன. இதைஅடுத்து, மாவட்டம் முழுதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
அங்கு ராணுவ வீரர்கள், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருடன் இணைந்து ஜம்மு - காஷ்மீர் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலை பஜாத் கிராமத்தில் பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி சுடத்துவங்கினர்.
இதையடுத்து, நம் வீரர்கள் நடத்திய பதிலடி தாக்குதலில், மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அங்கு நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான ஆயுதங்களையும் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்தனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட நபர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாகவும், அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்படுவதாகவும் பாதுகாப்புப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ரஜோரி மாவட்டத்தின் பிந்த் கிராமத்தில் பாதுகாப்புப் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு சீன தயாரிப்பில் உருவான கையெறி குண்டுகள் பதுக்கி வைத்திருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்தனர்.