ADDED : மே 03, 2024 07:04 AM
பீதர்: மின்கம்பத்தில் மோதிய ஜீப் கவிழ்ந்த விபத்தில், மூன்று வாலிபர்கள் இறந்தனர். இருவர் படுகாயம் அடைந்தனர்.
பீதர் அருகே சட்னஹள்ளி கிராமத்தில் நேற்று காலை, ஒரு ஜீப் வேகமாக சென்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த, ஜீப் தறிகெட்டு ஓடியது. மின்கம்பக்கத்தில் மோதி கவிழ்ந்தது. அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள், விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
ஜீப்பில் சிக்கியவர்களை மீட்க முயன்றனர். ஆனால் இடிபாடுகளில் சிக்கி, மூன்று பேர் இறந்தது தெரிந்தது. இருவர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பீதர் ரூரல் போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர்கள் பீதர் அருகே யகடபுரா கிராமத்தின் பிரதீப் சங்கர் கோலி, 25, வினோத்குமார் பிரபு, 25, வர்திஷ் சரணப்பா, 25 என்பது தெரிந்தது.
படுகாயம் அடைந்தவர்கள் பெயர், விபரம் தெரியவில்லை. உயிரிழந்த பிரதீப் சங்கர் கோலி தான், ஜீப்பை ஓட்டி வந்து உள்ளார். வேகமாகவும், அலட்சியமாகவும் ஓட்டியதால், விபத்து நடந்தது தெரிந்தது.