ADDED : ஜூலை 20, 2024 12:11 AM

கொப்பால்: கர்நாடகாவில் போதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்து துாங்கிய மூன்று இளைஞர்கள் ரயில் மோதி உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம், கொப்பால் மாவட்டம், கங்காவதி நகரத்தைச் சேர்ந்தவர் மவுனேஷ் பத்தாரா, 23. அன்னுாரின் கவுரம்மா கேம்ப் என்ற பகுதியில் வசித்தவர் சுனில் திம்மண்ணா, 23. ஹிரேஜந்தகல்லில் வசித்தவர் வெங்கட பீமராய், 20. இவர்கள் மூவரும் நண்பர்கள்.
நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் மூவரும், கங்காவதி ரயில் நிலையம் அருகில் தண்டவாளம் பக்கத்தில் அமர்ந்து மது அருந்தினர். பார்சல் வாங்கி வந்திருந்த உணவையும் அங்கேயே வைத்து சாப்பிட்ட அவர்கள், போதை தலைக்கேறிய நிலையில் தண்டவாளத்திலேயே படுத்து துாங்கினர்.
இரவு அந்த வழியாக வந்த, ஹூப்பள்ளி - சிந்தனுார் பாசஞ்சர் ரயில் மோதியதில், மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காலை, அவர்களது உடல்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.