குமாரசாமி ஆதரவாளர்கள் 300 பேர் காங்.,கில் ஐக்கியம்
குமாரசாமி ஆதரவாளர்கள் 300 பேர் காங்.,கில் ஐக்கியம்
ADDED : ஏப் 13, 2024 05:58 AM

பெங்களூரு: பெங்களூரு ரூரலில் தம்பி சுரேஷை வெற்றி பெற வைக்க, துணை முதல்வர் சிவகுமார் தீவிரமாக வேலை செய்து வருகிறார். இரவோடு, இரவாக குமாரசாமி ஆதரவாளர்கள் 300 பேரை, காங்கிரசுக்கு இழுத்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் பெங்களூரு ரூரல் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளராக சிட்டிங் எம்.பி., சுரேஷ் போட்டியிடுகிறார்.
இவர் துணை முதல்வர் சிவகுமாரின் தம்பி ஆவார். கடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரசில் வெற்றி பெற்ற ஒரே நபர், இவர் மட்டும் தான்.
இதனால் அவரை இம்முறை தோற்கடிக்க வேண்டும் என, பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் கங்கணம் கட்டிக் கொண்டு சுற்றுகின்றனர். சுரேஷுக்கு எதிராக பலமான வேட்பாளராக டாக்டர் மஞ்சுநாத்தை பா.ஜ., களம் இறக்கி உள்ளது. சுரேஷை தோற்கடித்து சிவகுமாரை அடக்க வேண்டும் என, பா.ஜ., மேலிடம் விரும்புகிறது. தம்பியை வெற்றி பெற வைக்கும் பொறுப்பு, அண்ணன் மீது விழுந்துஉள்ளது.
எக்காரணம் கொண்டும் தம்பி தோற்கக்கூடாது என்பதில், அண்ணன் உறுதியாக இருக்கிறார். இதனால் குமாரசாமியின் ஆதரவாளர்களை, காங்கிரசுக்கு இழுக்கும் வேலையை ஆரம்பித்து உள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு, குமாரசாமி எம்.எல்.ஏ.,வாக இருக்கும் சென்னப்பட்டணா தொகுதியின், சென்னப்பட்டணா நகராட்சி ம.ஜ.த., தலைவர் பிரசாந்த் உட்பட ஒன்பது ம.ஜ.த., கவுன்சிலர்கள், ஒரு சுயேச்சை கவுன்சிலர் காங்கிரசில் இணைந்தனர்.
மாண்டியாவில் தோல்வி
இந்நிலையில், குமாரசாமியின் நெருங்கிய ஆதரவாளரான சிவண்ணா உட்பட 300 பேர், நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு, குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் சிவகுமார் முன்னிலையில், காங்கிரசில் இணைந்தனர்.
அதன்பின் சிவகுமார் அளித்த பேட்டி:
தன்னை நம்பி இருப்பவர்களே கைவிடுவதில் குமாரசாமி சிறந்தவர். சென்னப்பட்டணாவில் தன்னை வெற்றி பெற வைத்த, மக்களை மறந்துவிட்டு, மத்திய அமைச்சர் பதவி ஆசைக்காக மாண்டியாவில் போட்டியிடுகிறார். அவர் அங்கும் தோற்பார்.
நம்புங்கள்
சென்னப்பட்டணா ம.ஜ.த., தொண்டர்களிடம் பேசினேன். உங்களுக்கு நான் இருக்கிறேன். என்னை நம்புங்கள் என்றேன். எனது பேச்சை நம்பி 300 பேர், கட்சியில் இணைந்து உள்ளனர். அவர்களை வரவேற்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

