ADDED : ஏப் 25, 2024 04:03 AM

பெங்களூரு: முதல் கட்டமாக நாளை ஓட்டுப்பதிவு நடக்கும், 14 தொகுதிகளில், மொத்தம் 2,88,19,342 வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதற்கு தகுதி பெற்றுள்ளனர். இதற்காக, 30,602 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் மூன்றாவது கட்டமாகவும், கர்நாடகாவில் முதல் கட்டமாகவும் நாளை 14 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கிறது.
இதுகுறித்து, மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ்குமார் மீனா, பெங்களூரில் நேற்று கூறியதாவது:
முதல் கட்டமாக நாளை ஓட்டுப்பதிவு நடக்கும், 14 தொகுதிகளில், 1,44,17,530 ஆண்கள்; 1,43,87,585 பெண்கள்; 3,067 திருநங்கைகள்; 11,160 தபால் வாக்காளர்கள் என மொத்தம் 2,88,19,342 வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
மொத்தம், 30,602 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பெங்களூரு உட்பட நகர பகுதிகளில் கடந்த தேர்தல்களில் ஓட்டு சதவீதம் குறைவாக பதிவாகின. எனவே வெவ்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் ஓட்டு சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, மகளிர், திருநங்கைகள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர் வாக்காளர்களை ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. வனப்பகுதியை ஒட்டி உள்ள பழங்குடியினர் வாழும் பகுதிகளில், பாரம்பரிய பழங்குடிகள் வாழும் வீடுகள் போன்று 40 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மகளிரை ஊக்குவிக்கும் வகையில், பெண் அதிகாரிகள் மட்டுமே பணியாற்றக் கூடிய, 1,120 ஓட்டுச்சாவடிகள்; மாற்றுத்திறனாளி அதிகாரிகள் மட்டுமே பணியாற்ற கூடிய 224 ஓட்டுச்சாவடிகள்; இளைய அதிகாரிகள் மட்டுமே பணியாற்ற கூடிய 224 ஓட்டுச்சாவடிகள்; கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பு அலங்காரத்துடன் கொண்ட 224 ஓட்டுச்சாவடிகளும் மாநிலம் முழுதும் அமைக்கப்பட்டுள்ளன.
வாக்காளர்களுக்கு உதவும் வகையில், முதல் முறையாக ஓட்டுச்சாவடி விபரத்தை கியூ.ஆர்.கோட் மூலம் அறியும் சீட்டு, வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டுள்ளன.
பெங்களூரு ரூரல் பா.ஜ., வேட்பாளர் கோரிக்கைபடி, அந்த தொகுதிக்கு, துணை ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
நாளை ஓட்டுப்பதிவு நடக்கும் 14 லோக்சபா தொகுதிகளிலும், சட்டசபை தொகுதி வாரியாக மொத்தம் 112 இடங்களில் இருந்து, இன்று மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வி.வி.பேட் இயந்திரங்களை, ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

