ADDED : மே 20, 2024 09:13 PM

சாம்ராஜ்நகர்: 'சக்தி' திட்டம் அமலுக்கு வந்த பின், பஸ்களின் தேவை கே.எஸ்.ஆர்.டி.சி.,யில் அதிகரித்துள்ளது. சாம்ராஜ்நகருக்கு புதிதாக 32 பஸ்கள் வழங்க, போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது.
கர்நாடகாவில் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதி அளிக்கும் 'சக்தி' திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களில் பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தர்மஸ்தலா, குக்கே சுப்ரமண்யா, சாமுண்டி மலை, நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரா, மலை மஹாதேஸ்வரா உட்பட மற்ற புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடனோ அல்லது பெண்கள் குழுவாகவோ செல்கின்றனர்.
சாம்ராஜ்நகர் மாவட்டத்துக்கு வரும் பயணியர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதற்கு தகுந்தார்போன்று பஸ்கள் இல்லை. அனைத்து கே.எஸ்.ஆர்.டி.சி., பிரிவுகளுக்கும், 'அஸ்வமேதா' என்ற பெயர் கொண்ட பஸ் வழங்கப்படுகிறது. சாம்ராஜ்நகருக்கு 32 அஸ்வமேதா பஸ்கள் கிடைத்துள்ளன.
முதற்கட்டமாக 27 பஸ்கள் வந்துள்ளன. இன்னும் சில நாட்களில் ஐந்து பஸ்கள் வந்தடையும்.
இது குறித்து, போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:
பயணியரின் வசதிக்காக சாம்ராஜ்நகருக்கு புதிதாக 32 அஸ்வமேதா பஸ்கள் வழங்கப்படுகின்றன. இவை சாம்ராஜ்நகர் - மைசூரு; கொள்ளேகால் - மைசூரு; குண்டுலுபேட் - மைசூரு; கொள்ளேகால் - சாம்ராஜ்நகர் இடையே இயக்கப்படும்.
'சக்தி' திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், சாம்ராஜ்நகரின் வெவ்வேறு தாலுகாக்களில் இருந்தே, மைசூருக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகம். குறிப்பாக திருத்தலங்களுக்கு செல்கின்றனர். இதனால் பஸ்களில் பயணியர் நெருக்கடி அதிகரித்து காணப்படுகிறது.
சாம்ராஜ்நகர் கே.எஸ்.ஆர்.டி.சி., பிரிவில் இருந்து, தினமும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்கின்றனர். இதில் பெண்களின் எண்ணிக்கை 1.3 லட்சம். தேவைக்கு தகுந்தபடி பஸ்கள் இயக்கப்படுகின்றன. மாவட்டத்துக்கு புதிதாக 32 அஸ்வமேதா பஸ்கள் கிடைத்துள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

