"எதிர்க்கட்சிகளின் நோக்கம் இது தான்": புட்டு புட்டு வைத்த அமித்ஷா
"எதிர்க்கட்சிகளின் நோக்கம் இது தான்": புட்டு புட்டு வைத்த அமித்ஷா
ADDED : ஏப் 03, 2024 05:10 PM

லக்னோ: 'எதிர்க்கட்சிகளின் நோக்கம் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களை முதல்வர் மற்றும் பிரதமர் ஆக்குவது தான்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் நடந்த பேரணியில் அமித்ஷா பேசியதாவது: காஷ்மீர் எங்களுக்கு சொந்தமானது. 2வது முறையாக மோடி பிரதமர் ஆகியதும் 370வது சட்டப்பிரிவை நீக்கி காஷ்மீரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றினார். காஷ்மீரில் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வரும் பணியை மோடி செய்தார். உ.பி.யில் இருந்து மக்கள் இடம்பெயர்வதை பா.ஜ., அரசு தடுத்துள்ளது, தற்போது குற்றவாளிகள் இடம்பெயர்கின்றனர்.
வரும் தேர்தலில் மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்க வேண்டும். அவர் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக நிறைய பணிகளை செய்துள்ளார். அகிலேஷ் யாதவ் கட்சியும், காங்கிரசும் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஒருபோதும் விரும்பவில்லை.
திமிர் பிடித்த இண்டியா கூட்டணியில் உள்ளவர்கள் 12 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் நோக்கம் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களை முதல்வர் மற்றும் பிரதமர் ஆக்குவது தான். மரணத்திற்குப் பின் இந்தியாவின் மிக உயரிய பாரத ரத்னா விருது பெற்ற சவுத்ரி சரண் சிங், விவசாயிகளின் சாம்பியன். இவ்வாறு அவர் பேசினார்.

