குஜராத்தில் 35 முஸ்லிம் வேட்பாளர்கள்: காங்.,சார்பில் யாரும் இல்லை
குஜராத்தில் 35 முஸ்லிம் வேட்பாளர்கள்: காங்.,சார்பில் யாரும் இல்லை
UPDATED : மே 05, 2024 10:01 PM
ADDED : மே 05, 2024 09:48 PM

காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் 35 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆனால் காங்.,சார்பில் யாரும் நிறுத்தப்படவில்லை.
குஜராத் மாநிலத்தில் மொத்தம் 26 பார்லி., தொகுதிகள் உள்ளன. சூரத் தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து 7-ம் தேதி நடைபெற உள்ள 3-ம் கட்ட தேர்தலில் மீதம் உள்ள 25 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் மொத்தம் 266 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 35 பேர் முஸ்லிம் வேட்பாளர்கள், வழக்கமாக பரூச் தொகுதி தவிர நவ்சாரி மற்றும் அகமதாபாத் ஆகிய தொகுதிகளிலும் முஸ்லிம் வேட்பாளர்கள் காங்., சார்பில் தேர்வு செய்யப்படுவர். இந்தாண்டு பரூச் தொகுதி காங்., கூட்டணி கட்சியான ஆம் ஆத்மிக்கு ஒதுக்கப்பட்டதால் அந்த வாய்ப்பும் காங்.,க்கு இல்லாமல் போகி உள்ளது.
இதனிடையே மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் காந்தி நகரில் முகமது அனில் தேசாய் என்பவருக்கு சீட் வழங்கி உள்ளது. இவர் பா.ஜ.,வின் அமித்ஷா வை எதிர்த்து போட்டியிட உள்ளார். இவரை தவிர இத் தொகுதியில் தான் அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் 8 பேர் வரையில் போட்டியிடுவதாக தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது.
தேர்தல் கமிஷன் தெரிவிக்கையில் ஜாம்நகர் மற்றும் நவ்சாரியில் தலா ஐந்து முஸ்லீம் வேட்பாளர்களும், படான் மற்றும் பருச் தலா 4 பேரும், போர்பந்தர் மற்றும் கெடா தலா இரண்டு பேரும், அகமதாபாத் கிழக்கு, பனஸ்கந்தா, ஜூனாகத், பஞ்ச்மால் மற்றும் சபர்கந்தா ஆகியவற்றில் தலா ஒருவரும் போட்டியிடுகின்றனர் .
இவர்களில் பெரும்பாலானோர் சுயேட்சைகளாக போட்டியிடுகின்றனர். அதே வேளையில், ரைட் டு ரீகால் கட்சி, பாரதிய ஜன் நாயக் கட்சி, சமூக ஜனநாயகக் கட்சி, கரிப் கல்யாண் கட்சி மற்றும் லாக் கட்சி போன்ற சில சிறிய கட்சிகளும் வெவ்வேறு இடங்களில் முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன என தெரிவித்து உள்ளது.
இது குறித்து முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், பெரிய அரசியல் கட்சிகள் முஸ்லிம் தலைவர்களை புறக்கணிக்கிறார்கள், எங்கள் பகுதி மக்கள் நிறைய பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள், ஆனால் உள்ளூர் தலைவர்கள் அவர்களுக்கு உதவ முன்வரவில்லை, அதனால் நாங்கள் ஒரு வழியைக் கண்டுபிடித்து தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களாக போட்டியிட வேண்டும். என கூறி உள்ளனர்.