வினாடிக்கு 3,729 பரிவர்த்தனை உலகின் நெ.1 ஆனது யு.பி.ஐ.,
வினாடிக்கு 3,729 பரிவர்த்தனை உலகின் நெ.1 ஆனது யு.பி.ஐ.,
ADDED : செப் 01, 2024 03:17 AM
புதுடில்லி: உலகின் மற்ற பணப்பரிவர்த்தனை தளங்களை பின்னுக்குத் தள்ளி, இந்தியாவின் யு.பி.ஐ., அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை, முதலிடத்தை பிடித்துள்ளது.
உலக அளவில் பணப்பரிவர்த்தனை மையமான, 'பே செக்யூர்' வெளியிட்டுள்ள புள்ளி விபரம்:இந்தியாவின் யு.பி.ஐ., தளம், ஒரு வினாடிக்கு 3,729 பரிவர்த்தனைகளைக் கையாண்டு, மற்ற நாடுகளின் பரிவர்த்தனை தளங்களைவிட முன்னிலை பெற்றுள்ளது. சீனாவின் 'ஆல் பே, பே பால்' மற்றும் பிரேசிலின் 'பிக்ஸ்' ஆகியவற்றைவிட 58 சதவிகித உயர்வு கண்டுள்ளது.
கடந்த ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான யு.பி.ஐ. பரிவர்த்தனையுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் அதே காலகட்டத்தில் 37 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நான்கு மாதங்களில், மொத்தம் 81 லட்சம் கோடி ரூபாய்க்கு பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.
ஒரு மாதத்தில் அதிகபட்சமாக, கடந்த ஜூலையில் 20.60 லட்சம் கோடி ரூபாய்க்கு, யு.பி.ஐ. பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. உலகம் முழுதும் 40 மாற்று பணப்பரிவர்த்தனை முறைகளை ஆராய்ந்ததில், இந்தியாவின் யு.பி.ஐ., முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவின் மொத்த பணப்பரிவர்த்தனைகளில் 40 சதவீதம், மின்னணு பரிவர்த்தனை இடம்பிடித்திருக்கும் நிலையில், அதில் பெரும்பகுதியை யு.பி.ஐ., பெற்றுள்ளது. அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில், யு.பி.ஐ. அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை எண்ணிக்கை, 10,000 கோடியை எட்ட வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.