ADDED : செப் 14, 2024 08:49 PM
லக்னோ:உத்தர பிரதேசத்தில், பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மூன்றாம் வகுப்பு மாணவி, மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
உ.பி., மாநிலம் லக்னோ மான்ட்போர்ட் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்தவர் மான்வி சிங், 9. பள்ளி மைதானத்தில் 12ம் தேதி மாலை விளையாடிக் கொண்டிருந்தார். திடீரென மயங்கி விழுந்தார். அருகிலுள்ள பாத்திமா மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு முதலுதவி செய்தனர். இதற்கிடையில், தகவல் அறிந்து விரைந்து வந்த பெற்றோர், மகளை சந்தன் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், மாரடைப்பு ஏற்பட்டு சிறுமி மரணம் அடைந்து விட்டதை உறுதி செய்தனர்.
இதுகுறித்து, போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சிறுமியின் குடும்பத்தினர் கூறினர். மாணவி இறந்ததால் நேற்று முன் தினம் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.