ரூ.2000 கோடியுடன் பிடிபட்ட 4 கன்டெய்னர்கள்: ஆந்திராவில் அதிர்ச்சி
ரூ.2000 கோடியுடன் பிடிபட்ட 4 கன்டெய்னர்கள்: ஆந்திராவில் அதிர்ச்சி
ADDED : மே 02, 2024 04:38 PM

அமராவதி: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கன்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கேரளாவில் இருந்து ஐதராபாத்திற்கு ரிசர்வ் வங்கி அனுமதியுடன் கொண்டு செல்லப்படுவது உறுதி செய்யப்பட்டதை அடுத்து பணத்துடன் கன்டெய்னர்களை போலீசார் விடுவித்தனர்.
ஆந்திராவில் வரும் மே13ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா செய்வதை தவிர்க்கும் வகையில், 50,000 ரூபாய்க்கு மேல் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லும் பணம், பரிசுப் பொருட்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அனந்தபுரம் மாவட்டத்தில் பாமிடி அருகே கஜ்ராம்பள்ளி என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அடுத்தடுத்து 4 கன்டெய்னர்கள் வந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தனர். சுமார் ரூ.2000 கோடி பணம் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
ஆவணங்கள் அனைத்தையும் சோதனை மேற்கொண்டதில் இவை கேரளாவில் உள்ள 3 வங்கிகளுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. கேரளாவில் இருந்து ஐதராபாத்திற்கு ரிசர்வ் வங்கி அனுமதியுடன் கொண்டு செல்லப்படுவது உறுதி செய்யப்பட்டதை, அடுத்து பணத்துடன் கன்டெய்னர்களை போலீசார் விடுவித்தனர்.

