சுற்றுலா தலங்களை பிரபலப்படுத்த மைசூரில் 4 நாள் சிறப்பு நிகழ்ச்சி
சுற்றுலா தலங்களை பிரபலப்படுத்த மைசூரில் 4 நாள் சிறப்பு நிகழ்ச்சி
ADDED : செப் 10, 2024 11:43 PM
மைசூரு : மைசூரு சுற்றுலா தலங்களை மேலும் பிரபலப்படுத்தும் வகையில், இன்று முதல், நான்கு நாட்களுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட சமூக வலை தள பிரபலங்களை, வெவ்வேறு இடங்களுக்கு அழைத்து செல்லும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாரம்பரிய கலாசாரம்
மைசூரில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. பாரம்பரிய கலாசாரம் மாறாமல் அப்படியே உள்ளதால், சுற்றுலா பயணியர் அதிகமாக வருகின்றனர்.
வெவ்வேறு சுற்றுலா தலங்களில், இன்று முதல் 14ம் தேதி வரை இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், கர்நாடகாவின் சுஜன் ஷெட்டி, சாண்டி மற்றும் விஜய், ஆசிக் பாளயம், லட்சுமி சரத்; தமிழகத்தின் கார்த்திக் முரளி; புதுச்சேரியின் வசந்த் முருகன்; தெலுங்கானாவின் நீது மற்றும் பாலாஜி.
கேரளாவின் முஜீப் பதிக்கா, தினி எல்தோ; மஹாராஷ்டிராவின் திவ்யாக் ஷி குப்தா, நாவேலி தேஷ்முக், ருச்சிகா அசாட்கர், இர்பான் சித்திக்; புதுடில்லியின் அமிதா பாண்டே, நிஹாரிகா அரோரா ஆகியோர் சுற்றுலா இடங்களுக்கு சென்று பிரபலமானவர்கள்.
இவர்கள், 'டிஸ்கவர் மைசூரு' என்ற தலைப்பில் பிரபல சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.
இன்று காலை 9:30 மணிக்கு, நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளனர். பின், பண்டிப்பூர் புலிகள் காப்பகத்துக்கு செல்ல உள்ளனர். இரண்டாவது நாளான நாளை, மைசூரு சென்னகேசவா கோவில், ஜெகன் மோகன் கலை கண்காட்சி மையம், ரோஸ் உட் கலை கண்காட்சி மையத்துக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.
வரும் 13ம் தேதி, சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில், கர்நாடக பட்டு தொழிற்சாலை, மைசூரு குதிரை சவாரி, அரண்மனைக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். இறுதியில், எம்.பி., யதுவீருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நோக்கம்
வரும் 14ம் தேதி, செயின்ட் பிலோமினாஸ் தேவாலயம், தேவராஜ் அர்ஸ் சந்தை ஆகிய பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர். இத்துடன் நான்கு நாட்கள் நிகழ்ச்சிகள் நிறைவு பெறும்.
இந்த சமூக வலைதள பிரபலங்கள், சுற்றுலா தலங்கள் குறித்து, வீடியோ எடுத்து, தங்கள் சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, பிரபலப்படுத்துவதே நோக்கமாகும்.