ADDED : ஆக 20, 2024 01:15 AM
அமராவதி, ஆந்திராவில் போலவரம் நீர்ப்பாசன திட்டம் தொடர்பான ஆவணங்களை தீயிட்டு எரித்தது தொடர்பாக, நான்கு ஊழியர்கள் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள 2.91 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் வழங்குதல், 960 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்தல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக கோதாவரி ஆற்றில் போலவரம் நீர்ப்பாசன திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இது தொடர்பான ஆவணங்கள் கிழக்கு கோதாவரி மாவட்டம், டபுளேஸ்வரத்தில் உள்ள போலவரம் பாசன திட்ட அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அலுவலகத்தின் இடது பிரதான கால்வாய் பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள், நேற்று முன்தினம் அலுவலகத்தை சுத்தம் செய்தனர்.
அப்போது, ஏராளமான நகல்கள் மற்றும் காகிதங்கள் இருந்ததால், போலவரம் நீர்ப்பாசன திட்டம் தொடர்பான 96 நகல்கள் உள்ளிட்ட ஆவணங்களை அவர்கள் துப்புரவு பணியாளரிடம் கொடுத்து எரித்ததாக கூறப்படுகிறது.
போலவரம் திட்ட அலுவலக நிர்வாகியின் முன் அனுமதியின்றி, அவர்கள் நகல்களை எரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அலுவலகம் தொடர்பான நகல்களை அழிப்பதில் உரிய நடைமுறையை பின்பற்றாததால் முதுநிலை உதவியாளர்கள் கனுகா ராஜு, கரம் பேபி, சிறப்பு வருவாய் ஆய்வாளர் கலா ஜோதி, கீழ்நிலை அதிகாரி ராஜசேகர் ஆகிய நால்வரும் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியின் போது நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கான ஆதாரங்களை அழிக்க, அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

