ADDED : ஜூலை 08, 2024 06:31 AM
ராய்ச்சூர்: சிறுத்தை தாக்கியதில் விவசாய வேலையில் ஈடுபட்டிருந்த நான்கு பேர் காயமடைந்தனர்.
ராய்ச்சூர் மாவட்டம், கம்பத்தால் கிராமத்தில், வனப்பகுதியை ஒட்டி உள்ள பண்ணையில் விவசாயிகள் வேலை செய்து கொண்டிருந்தனர். நேற்று காலை உணவு தேடி வந்த சிறுத்தை, பண்ணையில் இருந்த விவசாயிகளை நோக்கி பாய்ந்தது.
இதனால் அவர்கள், அலறியடித்து கொண்டு ஓடினர். சிறுத்தை தாக்கியதில் மல்லண்ணா கம்பதாலா, ரங்கநாதா, நாயக்க கம்பதாலா, ரமேஷ் கம்பதாலா ஆகியோர் காயமடைந்தனர். மற்றவர்கள் கூச்சலிட்டதால், சிறுத்தை அங்கிருந்து தப்பியோடியது. படுகாயம் அடைந்தவர்கள், தேவதுர்கா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தேவதுர்கா போலீசாருக்கும், வனத் துறையினருக்கும் கிராமத்தினர் தகவல் அளித்தனர்.
அங்கு வந்த அதிகாரிகள், சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுத்து உள்ளனர். காலை நேரத்தில் பணியில் ஈடுபட்டிருந்தவர்களை சிறுத்தை தாக்கியதால், கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.
சிறுத்தையை பிடித்து, வனத்துக்குள் விடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.