மாந்திரீகம் செய்வதாக பணம் பறிப்பு தமிழகத்தை சேர்ந்த 4 பேர் கைது
மாந்திரீகம் செய்வதாக பணம் பறிப்பு தமிழகத்தை சேர்ந்த 4 பேர் கைது
ADDED : மே 07, 2024 10:13 PM
மூணாறு:மூணாறு அருகே குடும்ப பிரச்னையை மாந்திரீகம் மூலம் தீர்த்து வைப்பதாக கூறி பணம் பறித்த தமிழகத்தைச் சேர்ந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
மூணாறு அருகே செண்டுவாரை எஸ்டேட் பகுதியில் சிலர் தொழிலாளர்களின் வீடுகளுக்குச் சென்று குடும்பத்தில் பல்வேறு பிரச்னைகள் இருப்பதாகவும், அதனை நிவர்த்தி செய்யவில்லை என்றால் உயிரிழப்பு உள்பட பல இழப்புகள் ஏற்படும் என பயமுறுத்தினர்.
சிலரை மிரட்டவும் செய்தனர். பிரச்னைக்கு மாந்திரீகம் மூலம் பரிகாரம் செய்யலாம் என நம்ப வைத்து மூவரிடம் 24,000 ரூபாய் பறித்தனர்.
பணம் கொடுக்க இயலாதவர்களிடம் டி.வி., உட்பட வீட்டு உபயோக பொருட்களை கேட்டனர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்தபோது மோசடி நபர்கள் என தெரியவந்தது.
அவர்கள் நான்கு பேரை தொழிலாளர்கள் பிடித்து வைத்து போலீசுக்கு தகவல் அளித்தனர். மூணாறு எஸ்.ஐ., நிஷார் தலைமையில் போலீசார் வந்து நான்கு பேரிடமும் விசாரணை நடத்தினார்.
சென்னை அருகே திருவள்ளூரைச் சேர்ந்த வாசுதேவன் 28, திருச்சியைச் சேர்ந்த தீனு 27, தஞ்சாவூரைச் சேர்ந்த கோபி, 24, விஜய் 25, என்பது தெரிய வந்தது.
நான்கு பேரையும் கைது செய்து பணத்தையும் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
இந்த கும்பலைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் மூணாறு அருகே வட்டவடையில் தங்கி பலரிடம் பணம் பறித்துள்ளனர். ஆனால் ஏமாந்தவர்கள் போலீசில் புகார் அளிக்க முன்வராததால் அவர்கள் தப்பிவிட்டனர்.

