ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை முயற்சி முதல்வர் உறவினர் மீது பரபரப்பு புகார் தாத்தா சாவு; மூன்று பேருக்கு தீவிர சிகிச்சை
ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை முயற்சி முதல்வர் உறவினர் மீது பரபரப்பு புகார் தாத்தா சாவு; மூன்று பேருக்கு தீவிர சிகிச்சை
ADDED : ஜூன் 09, 2024 02:39 AM
சாம்ராஜ்நகர : ஆபாச புகைப்படம், வீடியோவை வெளியிடுவதாக வாலிபர் மிரட்டியதால், ஒரே குடும்பத்தில் நான்கு பேர், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். ஒருவர் இறந்தார்; மூன்று பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மைசூரு, சீரனஹள்ளி அருகே சந்தேகாலா கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, கே.ஆர்., நகர் சீரனஹள்ளியை சேர்ந்த லோகேஷ், 36, என்பவர் ஒருதலையாக காதலித்தார். இவரது மனைவி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்தார்.
தன்னை திருமணம் செய்யும்படி, சிறுமியிடம் லோகேஷ் கூறி உள்ளார். ஆனால் சிறுமி மறுத்துவிட்டார். இதையடுத்து சிறுமியை ஆபாசமாக புகைப்படமும், வீடியோவும் லோகேஷ் எடுத்தார்.
புகாரை ஏற்கவில்லை
புகைப்படம், வீடியோவை காண்பித்து மிரட்டி, திருமணம் செய்யும்படி சிறுமிக்கு தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி சிறுமியின் தாய் லீலாவதி, 45, கே.ஆர்., நகர் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார், புகாரை வாங்கவில்லை.
இதனால் மனமுடைந்த சிறுமியின் குடும்பத்தினர் நேற்று சாம்ராஜ்நகரின் ஹனுாரில் உள்ள மலை மாதேஸ்வரா கோவிலுக்குச் சென்றனர்.
சிறுமி, சிறுமியின் தாய் லீலாவதி, தாத்தா மகாதேவ், 65, பாட்டி கவுரம்மா, 60, ஆகியோர் சாமி தரிசனம் முடித்துவிட்டு, மலை அடிவாரத்தில் உள்ள, பாறையில் அமர்ந்து விஷம் குடித்தனர்.
உயிருக்கு போராடிய நான்கு பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனளிக்காமல், மகாதேவ் இறந்தார். மற்ற மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
லோகேஷ், முதல்வர் சித்தராமையாவின் துாரத்து உறவினர் என்பதால், போலீசில் புகார் அளித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என, கே.ஆர்., நகர் ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.ஏ., மகேஷ் குற்றஞ்சாட்டி உள்ளார்.