ரயிலில் தீ பிடித்ததாக வதந்தி வெளியே குதித்து 4 பேர் பலி
ரயிலில் தீ பிடித்ததாக வதந்தி வெளியே குதித்து 4 பேர் பலி
ADDED : ஜூன் 15, 2026 08:21 PM
மோரேனா: மத்திய பிரதேசத்தில், ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியால் கீழே குதித்த நான்கு பயணியர், எதிரே வந்த மற்றொரு ரயில் மோதியதில் உயிரிழந்தனர்.
ம.பி.,யின் சத்தர்பூர் மாவட்டத்தின் கஜூராஹோவில் இருந்து, ராஜஸ்தானின் உதய்ப்பூருக்கு நேற்று முன்தினம் மதியம் இன்டர்சிட்டி விரைவு ரயில் புறப்பட்டது. இந்த ரயில், ஹேதம்பூர் – டோல்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது, ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியது.
அச்சமடைந்த பயணியர் சிலர், அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். தீ விபத்திலிருந்து தப்பிக்க ரயிலில் இருந்து நான்கு பயணியர் கீழே குதித்தனர். அப்போது, அருகே உள்ள தண்டவாளத்தில்,பஞ்சாபின் பெரோஸ்பூரில் இருந்து ம.பி.,யின் சியோனிக்கு வந்த பாதல்கோட் விரைவு ரயில் மோதியதில், அந்த நான்கு பேரும் உயிரிழந்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் படையினர், நான்கு பேரின் உடல்களை மீட்டனர். ‘ரயிலில் தீ விபத்து ஏற்படவில்லை. அது வதந்தி’ என, அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். வதந்தியை பரப்பியது யார் என்பது குறித்து விசாரணை நடக்கிறது.
விபத்து குறித்து, ரயில்வே உயரதிகாரி அனிருத் குமார் கூறுகையில், “விபத்து நடந்த இடத்தில், ஆபத்தான வளைவு உள்ளது. இதனால், தண்டவாளத்தில் நின்ற பயணியராலும், அவ்வழியாக வந்த விரைவு ரயிலின் டிரைவராலும் சரியாக பார்க்க முடியவில்லை. எனினும், தண்டவாளத்தில் பயணியர் நிற்பதை பார்த்ததும் விரைவு ரயிலின் டிரைவர் பிரேக் பிடித்தார். ஆனால், அதற்குள் விபத்து நடந்து விட்டது,’’ என்றார்.
