பெண்களை மானபங்கப்படுத்திய வழக்கில் 40 பேர் விடுவிப்பு
பெண்களை மானபங்கப்படுத்திய வழக்கில் 40 பேர் விடுவிப்பு
ADDED : ஆக 08, 2024 05:54 AM
மங்களூரு: ெதட்சிண கன்னடா, மங்களூரு படில் பகுதியில், தனியார் தங்கும் விடுதி இருந்தது. இந்த விடுதியில் இரவில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக, அப்பகுதி மக்கள் போலீசாரிடம் பலமுறை புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் கடந்த 2012 ஜூலை 28ம் தேதி தங்கும் விடுதிக்குள் புகுந்த, ஹிந்து அமைப்பினர் அரைகுறை ஆடைகளுடன் நடனமாடிய, ஐந்து பெண்களை பிடித்து தாக்கியதுடன், அவர்களின் ஆடைகளை கிழித்து மானபங்கப்படுத்தினர்.
இதை ஊடகத் துறையில் பணியாற்றும் நவீன் என்பவர் வீடியோ எடுத்து உள்ளார். பெண்ணை தாக்கிய வீடியோ ஊடகங்களில் வெளியாகின. இதையடுத்து தாக்குதலுக்கு ஆளான பெண்கள், நவீன் உட்பட 44 பேர் மீது, போலீசில் புகார் அளித்தனர். அனைவர் மீதும் வழக்கு பதிவானது.
இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி 44 பேரும், மங்களூரு 6வது கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்து இருந்தனர்.
விசாரணையின் போதே மூன்று பேர் இறந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வழக்கில் இருந்து, நவீன் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நேற்று முன்தினம் நீதிபதி காந்தராஜ் தீர்ப்பு கூறினார்.
தங்கும் விடுதிக்குள் புகுந்து, பெண்களை தாக்கியதற்கான, போதிய ஆதாரங்கள் போலீஸ் தரப்பில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று கூறிய நீதிபதி, ஆதாரம் இல்லாததால் 40 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார்.